Latest News

பிரிந்து போனவர்கள் ஹைகோர்ட் தீர்ப்பை உணர்ந்து திரும்பி வாருங்கள்.. ஓபிஎஸ், எடப்பாடி திடீர் அழைப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ள அழைப்புக் கடிதத்தில் நீர் அடித்து நீர் விலகுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,
எம்ஜிஆரின் தன்னிகரில்லாத மனிதாபிமான கொள்கைகளை செயல்படுத்தி தமிழகத்தில் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று இருக்க ஜெயலலிதா அமைத்திருக்கும் நல்லாட்சி மென்மேலும் வலுப்பெற்று மக்கள் பணிகளை சிறப்புடன் ஆற்றுவதற்கு உதவிடும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளிவந்தவுடன் கழக உடன்பிறப்புகள் பலரும் நேரிலும் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கிளைகள் தோறும் தீர்ப்பினை கொண்டாடி மகிழ்கின்றனர். கழகம் புதியதோர் எழுச்சியை பெற்றிருக்கிறது என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். இந்த உற்சாகத்தில் பங்கு கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எங்கள் இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜெயலலிதா தமிழக சட்டமன்ற பேரவையிலும், கழக செயற்குழு பொதுக்குழு கூட்டங்களில் சூளுரைத்தபடி அதிமுக ஆயிரம் காலத்து பயிர்.
நிழல் தரும் ஆலமரம்
பதவிக்காக செயல்படுவதில்லை
தமிழர்களுக்கு நிம்மதி என்னும் நிழல் தரும் ஆலமரம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழகத்தில் ஆட்சி செய்து பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தமிழர் நலனுக்காக தங்களையே அர்ப்பணித்த மகத்தான தலைவர்களின் வழியில் சமத்துவ சமதர்ம சமுதாயம் உருவாக்கிட பாடுபடும் இயக்கம் தான் அதிமுக. அதிமுக ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்கு தொண்டாற்ற நமக்கு கிடைத்த கருவிகள் தானே தவிர பதவிக்காக செயல்படும் சிந்தனை நம்மில் யாருக்கும் கிடையாது.

நீதி தேவதையின் புதிய பாதை
புதிய பாதை வகுத்துள்ள நீதி தேவதை
மக்கள் தொண்டு தான் நம் ஒரே குறிக்கோள் அந்த குறிக்கோள் நிறைவேற உயர்நீதிமன்ற தீர்ப்பு நமக்கு மேலும் உதவுகிறது என்பதால் தான் அதனை நாம் வரவேற்று கொண்டாடுகிறோம். உயர்நீதிமன்றம் வழங்கிய நியாயமான தீர்ப்பு கழகத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது. அதிமுக அரசு மென்மேலும் பல நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கும், தாய்மார்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் செய்வது உறுதி என்று தமிழக மக்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க நீதிதேவதை நமக்கு புதிய பாதையை வகுத்துத் தந்திருக்கிறது.

நீரடித்து நீர் விலகாது
அதிமுகவிற்கு திரும்புங்கள்
"நீரடித்து நீர் விலகுவதில்லை" என்பது முதுபெரும் தமிழ் பழமொழி அல்லவா சிறுசிறு மனமாச்சரியங்களையும், வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு நாம் ஒன்றுபட்டு உழைக்கும் போது நமது பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் கொண்ட இயக்கமாக ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் இயக்கமாக விஸ்வரூபமெடுத்து நம் அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் வீழ்த்தும் பெரும்படையாக உருவாகும் என்பதை நம் அன்பு சகோதர சகோதரிகள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்
எதார்த்தம் இது தான்
ஜெயலலிதா வழியில் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் அதிமுகவில் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அன்பும் பாசமும் கொண்டு சகோதர உணர்வுடன் மக்கள் பணியாற்றி வருகிறோம் சில தவறான வழிநடத்தலின் விளைவாகவும் ஆங்காங்கே கழக உடன்பிறப்புகள் இடையே நிலவிய சிறுசிறு மன கசப்புகள் காரணமாகவும் மக்கள் பணியாற்ற வாய்ப்புகள் தேடியும் மாற்று பாதையில் பயணிக்க சென்ற கழக உடன்பிறப்புகள் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதிமுக என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணையவேண்டும் என்று மிகுந்த பாசத்தோடும் அன்போடு அழைக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.