Latest News

நீட்: ஹால் டிக்கெட் குழப்பத்தால் தேர்வு எழுத முடியாத ராசிபுரம் மாணவி

நீட் தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் இருந்த குளறுபடியால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு எழுத முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.

தேர்வு மையத்துக்கு எதிரே ஏமாற்றத்துடன் ஜீவிதா. 
 
அலைகழிப்பு
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழக நீட் தேர்வு மாணவர்களுக்கு ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியது தொடர்பான சர்ச்சைக்கு இடையில் இத்தேர்வு தமிழகத்திலும் நடைபெற்றது. 

தேர்வுக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாகச் சென்ற பெற்றோர் ஆகியோர் பலத்த கெடுபிடிகளால் அலைகழிப்புக்கு ஆளானதாக பல இடங்களில் புகார்கள் எழுந்தன. 

அனுமதி மறுப்பு
ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி ஜீவிதாவுக்கு சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி செளடேஸ்வரி கல்லூரியில் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு ஹால்டிக்கெட் வழங்கபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி தேர்வு மையத்துக்கு வந்த ஜீவிதாவிடம் இரண்டு ஹால் டிக்கெட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றில் கேரள மாநிலம் கோட்டையம் பகுயில் உள்ள நீட் தேர்வு மையத்தின் முகவரியும் இன்னொன்றில் சௌடேஸ்வரி கல்லூரி முகவரியும் இருந்ததாகத் தெரிகிறது.
ஜீவிதாவுக்கு ஆதரவாக கேள்வி கேட்ட அவரது உறவினரை அப்புறப்படுத்தும் போலீசார். 
 
கொண்டாலம்பட்டி கல்லூரிக்கு தேர்வு எழுத வந்தபோது அலுவர்கள் அந்த மாணவியைத் திருப்பி அனுப்பினர். அதன்பிறகு அங்கு கூடியிருந்த மற்ற மாணர்களின் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாணவியை தேர்வு மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு மாணவி ஜீவிதா தேர்வு மையத்தில் இருந்து அழுதுகொண்டே வெளியேறினார்.அப்போது ஊடகங்களிடம் பேசிய மாணவியின் பெற்றோர் தாங்கள் எடுத்து வந்த ஹால்டிக்கெட் வேறு ஒருவருடையது என்றும் தேர்வுக்காக விண்ணப்பித்த கணினி மையத்தில் முறையாக விண்ணப்பிக்காததால் ஏற்பட்ட கோளாரு என்றும் தெரிவித்தனர். 

நீட் தேர்வு மைய அதிகாரிகள் கூறும்போது, மாணவி ஜீவிதாவின் ஹால் டிக்கெட்டில் ஒன்று போலியாக இருக்கலாம் என்றும், அவருடைய ஹால் டிக்கெட்டில் இருந்த பதிவு எண் இந்த மையத்தை சேர்ந்தது அல்ல என்றும் தெரிவித்தனர். மேலும், அவருடைய விண்ணப்பத்தை ஆன்லைனில் சோதித்தபோது அவர் தேர்வு எழுதுவதற்காக பணம் செலுத்தவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

கேரளாவில் தந்தை மரணம்
இதற்கிடையில், நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளாவுக்கு மகனுடன் வந்த தந்தை ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருவாரூரைச் சேர்ந்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தந்தை கிருஷ்ணசாமியுடன் தேர்வு எழுத கேரளா சென்றார். ஞாயிற்றுக்கிழமை காலை கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதச் சென்ற பிறகு, தாம் தங்கியிருந்த விடுதி மேலாளரிடம் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி கேட்டதாகக் கூறப்படுகிறது.
''சனிக்கிழமை காலை விடுதிக்கு வந்தது முதல், கிருஷ்ணமூர்த்தி, மகனின் எதிர்காலம் குறித்து மன உளைச்சலில் இருந்தார். கடைசி நிமிடத்தில் தேர்வெழுத வேண்டிய பதற்றத்துடன் பயணப்பட்டதாக கூறினார். மகனை தேர்வுக்கு அனுப்பிவிட்டு, சிறிதுநேரத்தில், நெஞ்சு வலிப்பதாகச் சொன்னார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். முதலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால், வேறுமருத்துவமனைக்கு அவரை மாற்றினோம். கிருஷ்ணசாமியின் உடல்நிலை மோசமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். பிறகு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறினர்,'' என தனியார் விடுதி மேலாளர் முத்துகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 

நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு மாணவர்கள் செல்லவேண்டிய கட்டாயத்தை எதிர்த்து பொதுநலவழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் க.மயில்வாகனன் தேர்வு எழுதிய மாணவர்களும், அழைத்து வந்த பெற்றோர்களுக்கும் சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என வழக்கு தொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாணவிகளிடம் கெடுபிடி
''மாணவர்கள், பெற்றோர் என அனைவரையும் கடும் அவதிக்கு உட்படுத்திய காரணத்திற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும். தேர்வு எழுதும் மனநிலையை குலைத்து, அவசரகதியில் பயணம் செய்யவைத்தது, நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக மாணவர்களின் குடும்பத்தினர் செய்த செலவுகளை அரசு திருப்பிக்கொடுக்கவேண்டும்,'' என்றார் அவர்.

தமிழக மாணவர்களுக்கு கேரளா மையங்களை ஒதுக்கியது உண்மைதான் என்று கூறியுள்ள சிபிஎஸ்இ, மாணவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே வடமாநில மையங்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பதிவு செய்ததால் கடைசிநேரத்தில் மையங்களை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது சி.பி.எஸ்.சி.
சிபிஎஸ்இ வாதங்களை மறுக்கும் மயில்வாகனன், மீண்டும் புதியவழக்கு ஒன்றை தொடுத்து, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நீதி கிடைக்க போராடப்போவதாகக் கூறினார்.

கரூரில் இருந்து கேரளாவுக்கு
கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதிய அனுபவம் அவர்களுக்கு மன உளைச்சல் தந்ததாகவும் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுவரை சென்னை நகரத்திற்குக் கூட பயணம் செய்த அனுபவம் இல்லாத கரூரைச் சேர்ந்த விவசாயி மனோகரன் மகன் வினு-வுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தமது உறவினர் ஒருவர் உதவியுடன் தமது மகனை கேரளா அழைத்துச் சென்றுள்ளார் மனோகரன்.
''நாங்கள் அதிகம் வெளியூர் போனது கிடையாது. வயல்வேலை மட்டும்தான் தெரியும். கடைசிநேரத்தில் கேரளா போகவேண்டும் என்ற தகவல் வந்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மகனும் சோர்வு அடைந்துபோனான். அவன் ஆசைப்பட்ட படிப்பை படிக்கவேண்டுமே என்பதற்காக, உறவினர் ஒருவரைக் கூட்டிக்கொண்டு எர்ணாகுளம் வந்தோம். எங்கள் குடும்பமே மனஉளச்சலுக்கு ஆளாகியுள்ளது,'' என்கிறார் மனோகரன். 

சனிக்கிழமை இரவுதான் விடுதி கிடைத்ததாகவும், பயணத்திலும், உடல் மற்றும் மனச்சோர்வுடன் மகன் தேர்வெழுத சென்றுள்ளதாகவும் மனோகரன் தெரிவித்தார். 

மூன்று லட்சம் நிதி உதவி
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை எழுத கேரளா சென்ற தமிழக மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து, மாணவனின் கல்விச்செலவு முழுவதையும் தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி தனது மகன் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளாவில் சனிக்கிழமை மாலை எர்ணாகுளத்திற்கு சென்று தங்கியுள்ளார். 

ஞாயிறு காலை மகனை நீட் தேர்வுக்கு அனுப்பிய கிருஷ்ணசாமி தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறியதால், அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாகவும், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக விடுதி மேலாளர் முத்துகுமார் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணசாமியின் மரணம் பற்றிய செய்தி கேட்டபின், அவரது மனைவியிடம் ஆறுதல் தெரிவித்த முதல்வர், கிருஷ்ணசாமியின் விருப்பப்படி கஸ்தூரி மகாலிங்கம் மருத்துவம் படிக்க வசதிகள் செய்யப்படும் என்றும் அவரின் படிப்புசெலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார் என தலைமைச் செயலக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இறந்த கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவர குழு ஒன்றை கேரளா அனுப்பியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 

மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து மூன்று லட்சம் அளிக்கப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.