Latest News

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மாற்றி மாற்றிப் பேசுகிறது - கே.பாலகிருஷ்ணன் வேதனை

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் வரைவு திட்ட அறிக்கையை மே 3-ம் தேதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இரண்டாவது குழு, இன்று அரியலூர் மாவட்டத்தில் தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பேரணியில் கலந்துகொள்ள வந்த பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசியதாவது, ``உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 6-ம் தேதி அளித்த தீர்ப்பில் ஆறு வார காலத்தில் ஸ்கீம் என்ற அர்த்தத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னதாக அளித்த 6 வார காலத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரும் வகையில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. 

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், எதுவம் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வரைவுதிட்டத்தை மே மாதம் 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுங்கள் எனக் கூறியிருப்பது, அவர்கள் காலதாமதம் செய்வதை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக நினைக்கத் தோன்றுகிறது. இதனால், இத்திட்டம் பல மாதங்கள் இழுத்தடிப்பதற்கு சாதகமாக அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாகப் பதிவு செய்கிறது. நாங்கள் காவிரி மேலாண்மை வாரியம் எனக் கூறவில்லை. ஸ்கீம் என்றுதான் சொன்னோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே குழப்பத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது. தமிழகத்தின் உரிமைகளைத் தட்டிப் பரிப்பதற்கும் அதைக் காலில் போட்டு மிதிக்கிற மத்திய அரசுக்கும் எல்லாவகையிலும் உச்ச நீதிமன்றம் துணைபோகிறதுபோல உள்ளது.

தமிழக எதிர்க்கட்சிகளைப் பொருத்தவரையில் காவிரி உரிமையைப் பெற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இதற்குப் பிறகாவது அனைத்து அரசியல் கட்சிகளும் தனித்தனியாகப் போராடுவதை விட்டுவிட்டு ஒன்றாகச் சேர்ந்து போராட வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 9-ம் தேதி விசாரணைக்கு வரும்போது, தமிழகத்துக்கு நிறைவான தீர்ப்பு கிடைக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதி முன்னதாக நம்பிக்கை கொடுத்தார். ஆனால், அவர் கொடுத்த நம்பிக்கைக்கு நேர்மாறாக இன்றைய உத்தரவு அமைந்துள்ளது. இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதி அன்றைக்கு ஒன்றும், இன்றைக்கு ஒன்றும் சொல்வது ஏன் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை" எனப் பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.