Latest News

பெண் குழந்தைகள் மீதான வன்முறை... திகைக்க வைக்கும் எக்ஸ்பிரஸ் 'ஜாமீன்'!

னிபடர்ந்த காஷ்மீரில்... எப்போதும் குண்டுச் சத்தத்துக்காக மட்டும் குரல் கொடுத்துவந்த இந்த உலகம், இப்போது பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட எட்டு வயது காஷ்மீர் குழந்தைக்காகக் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்று சொல்லும் இந்த உலகில்தான், பெண் சிசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துகொண்டிருக்கின்றன. 

சுதந்திரமாகக்கூடச் செல்ல முடியாத நிலை

ஒருகாலத்தில் கள்ளிப்பாலுக்கு இரையான பெண் குழந்தைகள், அடுத்து தாயின் கருவறையிலேயே அழிக்கப்பட்டன. ஆனால், அதைவிடக் கொடுமை... இன்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் பலிகடாவாக்கப்படுகின்றன. இதையெல்லாம் தினம் பார்க்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு சாமான்யர், "பெண் குழந்தைகள் பிறப்பது தவறா அல்லது அவர்கள் இந்தச் சமுதாயத்தில் வளர்வது தவறா"என்று கேள்வி கேட்கிறார், வேதனையுடன். ஆம், அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. இன்றைய குழந்தைகளைப் பொறுத்தவரை ஏதோ ஒருவகையில் பெரும்பாலும் உடல், உணர்வு, பாலியல்ரீதியான தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர். பள்ளிக்கு, பக்கத்து வீட்டுக்கு என அவர்கள் சுதந்திரமாகக்கூடச் செல்ல முடியாத நிலையல்லவா இன்று உருவாகிவிட்டது. இல்லையில்லை, பாதுகாப்புடன் அல்லவா அழைத்துச் செல்லக்கூடிய நிலை வளர்ந்திருக்கிறது? 

பெண்களையே மிரட்டுகிற உலகம்! 
 
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய காலம்போய்... பெண் விடுதலைக்கு எதிராகப் போராடிய காலம்போய்... இன்று பெண் சிசுக்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகப் போராடும் காலம் வந்துவிட்டது. ஓடும் பேருந்தில் நிர்பயாவுக்கு ஏற்பட்ட கதியையே இன்னும் மறக்காமல் இருக்கும் நாம், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களால் இன்னும் பல நிர்பயாக்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதுதானே உண்மை. பாலியல் சீண்டல்களால் இன்னும் எத்தனையோ பெண்கள் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதும், அழிந்துகொண்டிருப்பதும் வெளியில் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லத் தயங்குவது ஒருபுறம் என்றால், அப்படிப் பாதிக்கப்பட்ட பெண்களையே மிரட்டுகிற உலகம் இன்னொருபுறம்.

ஓட்டைவிழும் சட்டங்கள்!
 
"இப்போதிருக்கும் சட்டங்களே போதும். அதுவே, கடுமையானவை" என்கிறார்கள் வழக்கறிஞர்கள். ஆனால், அதன்மூலம் நீதிபெறுவதற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் எந்த அளவுக்குப் பாதிக்கிறார்கள் என்பதற்கு உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடந்திருக்கும் சம்பவமே ஓர் உதாரணம். சட்டங்கள் கடுமையாய் இருந்து என்ன பலன்? பல சட்டைகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறப்பதால்தானே சட்டங்களிலும் ஓட்டை விழுகிறது. அதன் விளைவுதான், இமயம்முதல் குமரிவரை நிர்பயாக்களும், ஹாசினிகளும் பலிகடாவாக்கப்படுகின்றனர்.
தப்பிவிடும் பாலியல் குற்றவாளிகள்!
 
வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, 'இவன் ஒரு பாலியல் குற்றவாளி. உளவியல்ரீதியாகப் பாதிப்புடையவன். இவனிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்' எனப் பொது இடங்களில் விளம்பரம் செய்வார்கள். இல்லையேல், அதுபோன்று தீங்கிழைத்தவனைப் பொதுஇடத்தில் கட்டிவைத்துக் கல்லால் அடித்துக் கொல்வார்கள். ஆனால், இங்கு பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் தண்டனையே பெறாமல் தப்பிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? உடனே விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்காததால்தானே? குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அளிக்கலாம். அதிகபட்சம் ஓராண்டுக்குள் வழக்கின் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிறது பாக்ஸோ. குற்றங்கள் மட்டுமே பெருகி நிற்கும் இந்தியாவில், குறைந்த அளவில்கூடப் பாலியல் வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதுதானே உண்மை. கடந்த 2015-ம் ஆண்டு, இந்தியாவில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 14,913-ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சிறுமிகளின் எண்ணிக்கை!
 
இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வழக்கில் குற்றவாளிக்கு 37 நாள்களில் ஜாமீன் கிடைத்துவிடுகிறது. ஏன், ஹாசினி வழக்கில் சம்பந்தப்பட்ட தஷ்வந்துக்குக்கூட விரைவாகவே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியிருந்தால், நீதி எப்படி நிலைநாட்டப்படும் என்பதே சாமான்யர்களின் கேள்வியாக இருக்கிறது. இதைவிடக் கொடுமை, பாதிக்கப்படும் சிறுமிகளின் குடும்பம் ஏழையாய் இருந்துவிட்டால் போதும், அவர்களின் கதி அதோ கதிதான். இந்த அவலநிலை இந்தியாவில் தவிர, வேறெங்கும் இல்லை. அதனால்தான், "இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் சிதைத்துக் கொல்லப்படும் சிறுமிகளின் எண்ணிக்கையைவிட, சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம்" என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.
"உரிய நீதி கிடைக்கும்!"
"பதவியில் இருப்போரும், பணத்திமிறில் இருப்போரும் இதுபோன்ற தவறுகளைச் செய்துவிட்டு, அவர்களைப் பயமுறுத்தி வைப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்" என்று அவர்கள் மேலும் விளக்கம் கொடுக்கின்றனர். "வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்வது ஒவ்வோர் இந்தியரின் கடமையாகும்"என்று கடந்த பிப்ரவரி மாதம், 'மான் கி பாத்' நிகழ்ச்சி மூலம் உரையாற்றியிருந்தார் பிரதமர் மோடி. அவர் சொல்லி இரண்டு மாதங்கள்கூடக் கடக்காத நிலையில் அவருடைய கட்சி, ஆட்சி செலுத்தும் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில்தான்... அவர் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ-வாலேயே ஒரு பெண் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அவருடைய தந்தை சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இது ஒருபுறமிருக்க... மறுபுறம் காஷ்மீரில் அந்தக் குழந்தை சிதைக்கப்பட்டிருக்கிறாள். இதைக் கண்டு கொதித்தெழும் பெண்கள் அமைப்பினர், "பிரதமர் மோடி விரும்பும் டிஜிட்டல் இந்தியா இதுதானா" என்று கேள்வி எழுப்புகின்றனர். "பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள். நமது குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கும்" என்று அழுத்தமாய்ப் பதில் தருகிறார் மோடி. ஆனாலும், எல்லா வழக்குகளிலும்... விசாரணைகள் எப்போதும்போல் அலட்சியமாகவும்... ஆளும் அதிகாரத்துக்குச் சாதகமாகவுமே இருக்கின்றன.

இதுபோன்ற குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து பெருகுமானால், "பெண்கள் வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைவதால், விடுதலை வேட்கை பிறப்பது அரிது" என்ற தந்தை பெரியாரும், "பெண்மீது ஆண் திணித்திருக்கிற எல்லாக் கோட்பாடுகளையும் மீறாதவரை பெண்ணுக்கு விடுதலையே இல்லை" என்று எழுதிய அண்ணல் அம்பேத்கரும் மீண்டும் பிறக்க வேண்டிய காலம் வெகுதூரத்தில் இல்லை.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.