Latest News

அம்மா உணவகம்தான் இன்ஸ்பிரேஷன்... கேரளாவில் உருவான `சும்மா' ரெஸ்டாரன்ட்!

ஹோ ட்டலுக்குச் சென்றால் பில், பர்ஸைப் பதம்பார்த்துவிடும். கேரளாவில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில், பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வயிறாரச் சாப்பிட்டுக்கொள்ளலாம். `எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்க. கையில் இருக்கிறதைக் கொடுங்க' என்ற வாசகமே இந்த ரெஸ்டாரன்டின் தாரகமந்திரம். கேரளாவை ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்த ஹோட்டலை நிர்வகிக்கிறது. `பீப்பிள்'ஸ் ரெஸ்டாரன்ட்' என்பது இதன் பெயர். தமிழகத்தில் எந்த ஓர் அரசுத் திட்டம் என்றாலும் `அம்மா' அல்லது `ஐயா' பெயரில்தான் ஆரம்பிக்கப்படும். கேரளத்தில் திறக்கப்பட்ட இந்த ரெஸ்டாரன்டுக்கு அந்த மாநில அரசு, மக்களின் பெயரையே சூட்டியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இதுதானே அழகு! 

பீப்புள்'ஸ் ரெஸ்டாரன்டின் முதல் கிளை, ஆலப்புழையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்குத் தமிழகத்தின் அம்மா உணவகமும் ஒருவகையில் இன்ஸ்பிரேஷன். அம்மா உணவகத்தில் வகை வகையான உணவுகள் பரிமாறப்படுவதில்லை. பணம் கட்டிய பிறகே அம்மா உணவகத்தில் உணவைப் பெற முடியும். இந்த ரெஸ்டாரன்ட், அம்மா உணவகத்திலிருந்து சற்று வேறுபடுகிறது. இங்கே, விதவிதமாக உணவு வகைகள் கிடைக்கும். சோறு, சாம்பார், காய்கறிக் கூட்டுகள், அப்பளம், ரசம், மோர், தயிர் எனத் தட்டு நிறைய வைக்கிறார்கள். பார்க்க நட்சத்திர ஹோட்டல்போலவே காட்சியளிக்கும் இந்த ரெஸ்டாரன்டைக் கட்ட 11 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இரண்டு தளங்களாகச் செயல்படுகிறது. உணவு தயாரிப்புக்காக அதிநவீன அடுப்புகள் உள்ளன. ஹோட்டலின் கீழ்த்தளத்தில் சமையல் அறையும் மேல் தளத்தில் டைனிங் டேபிள்களும் உள்ளன.
ரெஸ்டாரன்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிட இரண்டரை ஏக்கர் நிலமும் உள்ளது. முற்றிலும் இயற்கையான முறையில் கீரை வகைகள், காய்கறி வகைகள் பயிரிடப்படுகின்றன. சாப்பிட வருபவர்கள் இந்தக் காய்கறிப் பண்ணையையும் பார்வையிடலாம். ஹோட்டல் சுவர்களில் அழகுச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு மக்களின் பங்களிப்பு வேண்டுமென்று கருதிய மார்க்ஸிஸ்ட் கட்சி, மக்களிடமிருந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டபோது, ஆலப்புழை மக்கள் தாராளமாக நிதி வாரி வழங்கினர். சில நாள்களிலேயே 23 லட்சம் ரூபாய் நிதி திரள, கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆச்சர்யப்பட்டுப்போனார். பீப்புள்'ஸ் ரெஸ்டாரன்ட் அமைக்கும் பணிகளை முடுக்கினார். மின்னல் வேகத்தில் பணிகள் நடந்தன.
கடந்த மார்ச் 5-ம் தேதி, இந்த ரெஸ்டாரன்டின் தொடக்க விழாவும் நடந்தது. அமைச்சர் வருவார்... ரிப்பன் வெட்டுவார் என்றெல்லாம் எந்த ஒரு ஃபார்மாலிட்டியும் இல்லை. ரெஸ்டாரன்ட் உருவாகக் காரணமாக இருந்த அத்தனை பேரும் சேர்ந்து விருந்து உண்டு ரெஸ்டாரன்டைத் திறந்துவைத்தனர். அமைச்சர் தாமஸ் ஐசக்கும் விருந்தில் பங்கேற்றார். தினமும் 2,000 பேருக்கு இங்கே உணவு தயாரிக்கிறார்கள். `கேஷியர்' என்கிற `கேரக்டரே இந்த ரெஸ்டாரன்டில் கிடையாது. உங்கள் வயிறு நிறைய எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். `எவ்வளவு உணவு கேட்டாலும் பரிமாற வேண்டும்; வாடிக்கையாளர்களைப் புன்முறுவலுடன் வரவேற்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது ஹோட்டல் நிர்வாகம். வயிறு நிரம்பியவுடன் கேஷியர் இருக்கவேண்டிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் உங்களிடம் இருக்கும் பணத்தை போட்டுவிட்டு சென்றுவிடலாம். உங்கள் மனசாட்சிதான் இங்கே கேஷியர். முதல் நாளில் 10,000 ரூபாய் வசூலாகியிருக்கிறது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முக்கியக் காரணகர்த்தாவாக இருந்த கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில், ``அம்மா உணவகம், இலவசமாக உணவு அளிக்கும் கம்யூனிட்டி கிச்சன்போல செயல்படாது. இது ரெஸ்டாரன்ட் போலவே செயல்படும். மக்கள் பங்களிப்புடன் கேரளத்தின் பல நகரங்களில் பீப்புள்'ஸ் ரெஸ்டாரன்ட் தொடங்கப்படவுள்ளது. பீப்புள்'ஸ் ரெஸ்டாரன்டுக்கு வந்து டீ குடித்துவிட்டு 1,000 ரூபாய் தாளை பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லும் தாராள மனசுக்காரர்களை இங்கே பார்த்தேன். அவர்களைப் போன்றோர்தான் பீப்புள்'ஸ் ரெஸ்டாரன்டின் பலம்'' என்றார்.
அரிசி திருடியதாகக் கூறி மதுவைக் கொன்ற மாநிலத்தில், பீப்புள்'ஸ் ரெஸ்டரான்ட். மாநிலம் முழுவதும் பரவட்டும்!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.