Latest News

காவிரி விவகாரத்தில் திமுக அரசியல் செய்யாது: மு.க.ஸ்டாலின் பேச்சு

ஈரோடு:காவிரி விவகாரம் என்பது மாநிலத்தின் விவசாயிகள் பிரச்னை. அதில், திமுக எப்போதும் அரசியல் செய்யாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் திமுக மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று மாநாட்டின் 2-வது நாள் பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம் என்பது உள்ளிட்ட 50 தீர்மானங்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மாநாட்டின் இரண்டாவது நாள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு நிறைவு உரையாற்றி வருகிறார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே திமுகவின் கொள்கையாகும். உடல் நலிவுற்று இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியால் விழா மேடைக்கு வர இயலவில்லை. கருணாநிதியின் கம்பீரக் குரலை மாநாட்டில் கேட்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. விழாவில் பங்கேற்க இயலாவிட்டாலும் கோபாலபுரத்தில் இருந்து நம்மை வாழ்த்தி வருகிறார். தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம், அதிகார குவியலை அடித்து நொறுக்குவோம். மதவெறியை மாய்த்து மனித நேயம் காப்போம், வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம். கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்போம். அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். 

திமுகவில் செயல் தலைவராக பணியாற்றுவதைவிட, தொண்டராக பணியாற்றுவதிலே பெருமைகொள்கிறேன். திமுக எனும் பெட்டி கலைஞர் கையில் இருக்கிறது, அதை ஏற்று நான் செயல்படுவேன். என் மீது இருக்கும் நம்பிக்கையை விட உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். 

தமிழ்நாடு செழித்திட வேண்டும் என்ற நோக்கில் மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாநாடு வெற்றி பெற்றது போன்று ஈராடு மண்டலத்திலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.

திமுகவை அழித்தே தீருவது என்று கங்கணம் கட்டி கொண்டு கூட்டம் கிளம்பி உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அதிபலத்துடன் உள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது. தமிழகத்தில் மனித உரிமை பறிக்கப்படுகிறது. ஹிந்தி திணிக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தை திணிக்க பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மாநில பிரச்னைகளில் மற்ற மாநிலத்தவர்கள் ஒன்று கூடும் போது தமிழகத்தில் அந்த நிலை இல்லை. காவிரி விவகாரம் என்பது விவசாயிகள் பிரச்னை. அதில் திமுக எப்போதும் அரசியல் செய்யாது.
தகுதியை பார்க்காமல் தமிழகத்தின் பிரச்னையை கருத்தில் கொண்டு ஆளுநரை சந்தித்தோம். மத்திய பாஜக ஆட்சிக்கு தமிழகத்தில் ஆளும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அரசு அடிமை சேவகம் செய்து கொண்டிருக்கிறது. பாஜக அரசை முறியடித்திட வேண்டும். 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. காவிரி கண்காணிப்புக் குழு அமைப்பது என்பது ஒரு நாடகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். அதற்கும் பலனில்லை என்றால் தில்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

பண பலம் மற்றும் அதிகார பலத்தை கொண்டு மத்திய அரசு இப்போது தமிழகத்தை வளைக்க முயற்சி செய்கிறது. மத்தியில் உள்ள பாஜக அரசை முறியடிக்க வேண்டும், தமிழகத்தில் மதவாதத்தை அனுமதிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார். 

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக சிலர் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். வெற்றிடம் இருப்பதாக கூறி தமிழகத்தில் முதல்வர் ஆகும் கனவுடன் பலரும் முயற்சிக்கின்றனர். வெற்றிடம் என்பது எப்போதும் கிடையாது என்று ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.