Latest News

பழனிசாமி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பயங்கர மோதல்! ரணகளமான கூட்டுறவுத் தேர்தல் நாமினேஷன்!

கரூரில், கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது, முதல்வர் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பாக... பலருக்கும் ரத்தம் சொட்டச் சொட்டச் காயம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கூட்டுறவு கைத்தறிச் சங்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் என மொத்தம் 64-கூட்டுறவு சங்கங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில்,10-கூட்டுறவு சங்கங்கள் பதற்றமானவை என ஏற்கெனவே கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் பாதுகாப்புப் பணியில் கூடுதல் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, அ.தி.மு.க-வினர் முதலில் சங்கத்திற்குச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், டி.டி.வி.தினகரன் அணியினரும், வேட்பு மனு தாக்கல்செய்ய வந்திருப்பதாகக் கூறி, சங்க அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். அவர்களைத் தடுத்த காவல் துறையினர், 'ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றவர்கள் வெளியில் வரட்டும். பின்னர் நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்' என்று கூறியுள்ளனர். இதற்கு, தினகரன் தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்து, காவல் துறையினரிடம் வாக்குவாதம்செய்துள்ளனர். இதனால், தள்ளுமுள்ளு வரை சென்றுள்ளது. இதனிடையே தினகரன் ஆதரவாளர்கள், "சசிகலா, தினகரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்க" என்றும் "எடப்பாடியார், பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒழிக" என்றும் கோஷமிட்டனர்.

இதனால் கோபமுற்ற ஆளும் கட்சியைச் சேந்தவர்களும் பதிலுக்கு, 'அம்மாவைக் கொன்றவர்கள் ஒழிக, காட்டிக்கொடுத்த எட்டப்பன் செந்தில் பாலாஜி ஒழிக, தினகரன் ஒழிக" என கோஷமிட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டதைக் கவனித்த காவல் துறையினர், உடனடியாக அதிரடிப்படையினரைக் குவித்தனர். எதிர்பார்த்தது போலவே இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுக் கலவரமாக மாறிய சூழலில், அதிரடிப்படையினரை வைத்து இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இதனிடையே, தினகரன் தரப்பில் சுமார் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய சங்க அலுவலகத்துக்குள் நுழைந்துவிட்டனர். இச்சங்கம் முதல் தளத்தில் இருந்ததால், செய்தியாளர்கள் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. 'உள்ளே என்ன நடந்தது?' என்று அறியாத சூழலில், இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளே தாக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில், இருவருக்கும் ரத்தம் வரும் அளவுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது. எடப்பாடி அணியைச் சேர்ந்த தொண்டர் அவர் எனச் சொல்லப்பட்டது. இச்சம்பவங்களை கவனித்துக் கொண்டிருந்த கரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான காவல் துறையினர், டி.டி.வி.தினகரன் அணியினர் 8 பேரை கைதுசெய்து, காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.