Latest News

குடிநீர் கடல்நீராகும் அபாயத்தில் சாத்தான்குளம்!' - முதல்வரிடம் முறையிட்ட விவசாயிகள்


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில், தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு வெள்ள உபரிநீர்க்கால்வாய் பணி தொய்வு காரணமாக போதுமான நிலத்தடி நீர் இல்லாததால் ஆழ்துளைக் குழாய் கிணறுகளில் கடல்நீர் உட்புகுந்து, குடிநீர் கடல்நீராகும் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள்.


தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு - எம்.எல்.தேரி இணைப்புக்கால்வாய்ப் பகுதி விவசாயச் சங்கங்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜாசிங் ஆசீர், திரவியம், சங்கர், மகா.பால்துரை ஆகியோர் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்கள் பகுதியின் நீண்ட காலப் பிரச்னைக்குத் தீர்வுகாண மனு அளித்தனர்.


அவர்களிடம் பேசினோம்.''தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பகுதிகளில் தாமிரபரணி ஆறு மற்றும் மணிமுத்தாறு தண்ணீர் வழங்க வாய்ப்பிருந்தும் சீராக அமல்படுத்தாத காரணங்களினால் விவசாயம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறுகள் அளவுக்கு அதிகமாகப் போடப்பட்டுள்ளதால் கடல்நீர் உட்புகுந்து கிடைக்கிற குடிநீரும் உப்புத்தண்ணிராக மாறிவருகிறது. இதைக் குடிக்கும் பொதுமக்கள் சிறுநீரகக் கோளாறு மற்றும் கல் அடைப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் எவ்வித தொழிற்சாலைகள் இல்லாமையாலும், வறட்சியின் காரணமாகவும் திருப்பூர், கோவை, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதி பறிபோனது. இதே நிலை நீடித்தால் சாத்தான்குளம் தாலுகாவும் இல்லாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வருகிறது.

தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு வெள்ள உபரிநீர்க்கால்வாய் பணி தொய்வு அடைந்திருக்கிற காரணங்களினால் ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் கன அடி தண்ணீர் மழைக்காலங்களில் வீணாகக் கடலுக்குள் செல்கிறது. போதுமான நில அளவையர்கள் இல்லாததே பணிதொய்வுக்குக் காரணமாகப் பொதுப்பணித்துறை கூறிவருகிறது. எனவே, ஓய்வு பெற்ற நில அளவையாளர்கள் மற்றும் பிற பகுதி நில அளவையாளர்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும். மணிமுத்தாறு அணையில் 80 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும்போது பாசனத்திற்காக 4 மதகுகளிலும், இரண்டு இரண்டு மதகுகளாகத் திறப்பது வழக்கம். இவ்வாண்டு 114 அடி தண்ணீர் இருந்ததால் 4 மதகுகளிலும் 2017 டிசம்பர் 18 முதல் 2018 மார்ச் 31வரை நீர்ப்பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிட தாங்கள் ஆணை பிறப்பித்துள்ளீர்கள். ஆனாலும், சாத்தான்குளம் தாலுகா குளங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்கப்படாததால் பயிர்கள் காயத் தொடங்கிவிட்டன. 500 கன அடி தண்ணீர் செல்லும் அளவுக்குக் கால்வாய்கள் வலுவாக இல்லை. இருக்கின்ற கால்வாய்களும் தூர்ந்து போய் உள்ளதாகக் கூறி அதிகாரிகள் எங்களின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்கின்றனர். 65 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை நவீனக் கருவிகள் கொண்டு ஆழப்படுத்தி கடைமடைப் பகுதிகளாகிய எங்கள் தாலுகா குளங்களுக்குத் தண்ணீர் சீராகக் கிடைத்திட வழிவகுத்திட வேண்டும்.

மருதூர் மேலக்கால்வாய் அணைக்கட்டிலிருந்து சடையநேரி மற்றும் புத்தன் தருவை குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்கள் 750 கன அடி தண்ணீர் சீராகப் பாயும்படி ஆழப்படுத்தினால் வீணாகக் கடலுக்குச் செல்லும் தண்ணீர் வறண்ட சாத்தான்குளம் பகுதிக்குக் கிடைத்திட வாய்ப்பாக இருக்கும். எங்களின் கோரிக்கைகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரிடம் தெரிவித்திருந்தோம். அவர்களின் ஏற்பாட்டில் இன்று காலை முதல்வரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்து மனு கொடுத்துள்ளோம். முதல்வர் தனிக்கவனம் செலுத்தி கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்தினால் வறட்சிப் பகுதிகளான சாத்தான்குளம், நாங்குநேரி, இராதாபுரம், திசையன்விளை மற்றும் உடன்குடி ஒன்றியப் பகுதிகளை வறட்சியின் கோரப்பிடிகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்" என்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.