Latest News

எம்.ஜி.ஆரும்.. திருச்சியும்..! அ.தி.மு.க பாதையில் மலைக்கோட்டை #MGR100

தி.மு.க-வின் தேர்தல் பிரவேசமும் திருச்சியில்தான்; அ.தி.மு.க உருவாகக் காரணமான முதல் முக்கிய ஆர்ப்பாட்டம் நடந்ததும் திருச்சியில்தான்! 1949 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பேரணியோடு தொடங்கப்பட்டது தி.மு.க. அண்ணாவின் மீது ஈர்ப்பு கொண்ட எம்.ஜி.ஆர் 1952 ஆம் வருடம் தி.மு.க-வில் இணைந்தார். திராவிடக் கர்ணண் என்றும் போற்றப்பட்டார்.
திருச்சியில் 1956 ஆம் வருடம் மே மாதம் நடைபெற்ற 2-வது மாநில மாநாட்டில், 'தேர்தலில் பங்கேற்பது' என முடிவு செய்த தி.மு.க., பிரசார நாயகனாக எம்ஜிஆரைத் தேர்ந்தெடுத்தது. ஆனாலும் கட்சிக்குள் கருணாநிதியோடு எம்.ஜி.ஆருக்குப் பிணக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். தி.மு.க-விலிருந்து வெளிவந்த எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது தொண்டாகள் முதன்முதலாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தினர்.
திருச்சியைச் சேர்ந்த கே.சவுந்தர்ராஜன், தேவதாஸ், கரு.அன்புதாசன், குழ.செல்லையா, வடிவேலு, பாப்பாசுந்தரம், முசிறி புத்தன் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க-விலிருந்து விலகி எம்.ஜி.ஆருடன் கை கோத்தனர். எம்.ஜி.ஆர். அனுமதியின்றியே அவரது ஆதரவாளர்கள் திருச்சியில் தி.மு.க கொடிகளை இறக்கி, தி.மு.க கொடியின் இடையில் தாமரைப் பொறித்த கொடிகளை ஏற்றி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். திருச்சி ரசிகர்கள் தந்த நம்பிக்கையில், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (அ.தி.மு.க) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்! அ.தி.மு.க-வின் முதல் பொதுக்கூட்டம் 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆரைக் காணப் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.சவுந்தர்ராஜன், சவுந்தர பாண்டியன், தேவதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும் கலந்துகொண்டனர். 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க-வின் முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத் தேர்தலுக்கு திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நிதி திரட்டினார் எம்.ஜி.ஆர். அந்தகூட்டத்தில் எஸ்.எம்.என். அமிர்தீன் முதல் தேர்தல் நிதியை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து தி.மு.க. அரசை எதிர்த்து எம்.ஜி.ஆர். அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் மெயின்கார்டுகேட் காமராஜ் வளைவில்தான் நடைபெற்றது. முதல் பொதுக்குழுவையும், மாநில மாநாட்டையும் எம்.ஜி.ஆர் திருச்சியிலே நடத்தினார். 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 23, 24 ஆகிய இரு நாட்கள் காட்டூரில் நடந்த மாநில மாநாடு தமிழகத்தில் அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இந்த வித்தானது அவரை 1980 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில் முதல்வர் என்னும் மரமாக்கியது. தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை ராசியாகக் கருதிய எம்.ஜி.ஆர்., பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்ட மேம்பாட்டுத் திட்டத்தினையும் மாநாடு நடந்த அதே இடத்தில், 1982 ஆம் வருடம் தொடங்கிவைத்தார். எம்.ஜி.ஆரின் ராசி என்றில்லாமல், அ.தி.மு.க-வின் ராசி என்பதுபோல் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவும் முதன்முதலில் திருச்சி
ஒத்தக்கடையில் நடைபெற்றக் கூட்டத்திலே பங்கேற்றார். இப்படி அ.தி.மு.க-வுடன் பெரிதும் தொடர்புகொண்ட திருச்சியை தலை நகரமாக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முனைந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அவரது எண்ணத்துக்கு எதிர்க்கட்சிகளிடத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து மக்கள் வந்துசெல்வது பெரும் சிரமம். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வந்துசெல்ல தமிழகத்தின் மையமான திருச்சியைத் தலைநகரமாக மாற்றியும், அங்கு தலைமைச் செயலகம் அமையப்பெற வேண்டும் என்றும் கருதினார் எம்.ஜி.ஆர். இதற்காக 1983 ஆம் ஆண்டு திருச்சியைத் தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனைப் பொருட்படுத்தாத எம்.ஜி.ஆர்., திருச்சி அண்ணாநகர் நாவல்பட்டிலும், முசிறி அருகிலும் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியைத் தொடங்கினார். மேலும், தனது இறுதிக் காலத்தில், திருச்சியில் தங்க விரும்பினார். இதற்காக குடமுருட்டி ஆற்றங்கரை அருகேகாவிரிக்கரையிலிருந்து உறையூர் செல்லும் சாலையில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டங்களுடன்கூடிய பங்களா வீட்டை, சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரிடமிருந்து வாங்கினார். தனது விருப்பப்படி மாற்றம் செய்யப்பட்டிருந்த பங்களாவைப் பார்ப்பதற்காக அவர் திருச்சி வந்திருந்தபோது, 'திருச்சியை தலைநகரமாக மாற்றினால், மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்' என்ற தனது எண்ணத்தையும் திருச்சி அ.தி.மு.க-வினரிடம் கூறியிருக்கிறார். பின், அமெரிக்கா சென்ற அவருக்கு உடல்நிலை மோசமானது. அதன்பின்னர் அரசியல் சூழ்நிலையும், இந்திராகாந்தி மரணமும், திருச்சியைத் தலைநகரமாக மாற்றும் திட்டத்தையே கைவிடும் நிலைக்குக் கொண்டுபோனது. எம்.ஜி.ஆரின் நிறைவேறாத திட்டத்தில், முக்கிய ஒன்றாக அது இருந்தது என்றே கூறலாம்.

எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றும் வகையில், திருச்சியைத் தமிழகத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்று முயற்சி செய்தார் ஜெயலலிதா. திருச்சியை சொந்த ஊர் என்று சொந்தம் கொண்டாடினார். எம்.ஜி.ஆரின் விருப்பமாக இருந்த திருச்சியிலிருந்து ஆர்.சௌந்தர்ராஜன் என்பவரை சத்துணவுத்துறை அமைச்சராக்கினார். இவர்தான் மதுரையில் எம்.ஜி.ஆர் முன்னிலையில்,ஜெயலலிதாவுக்கு வெள்ளி செங்கோல் வழங்கி புரட்சித்தலைவி என பட்டமும் வழங்கினார். மேலும், வீட்டுவசதித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களாகவும் திருச்சியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கினார். திராவிட அரசியலில், குறிப்பாக அ.தி.மு.க தேர்தல் பாதையில், மலைக்கோட்டை திருச்சி முக்கிய பங்கு கொண்டே வந்துள்ளது... அந்தத் தொடர்பு இன்றும் தொடர்ந்து வருகிறது!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.