Latest News

ஜெயலலிதா படத்திறப்பு: சட்ட மன்றமா சட்ட மீறல் மன்றமா" - கேள்வி எழுப்பும் இயக்கங்கள்

றைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "பீனிக்ஸ் பறவை போல் மீண்டு உயிர்த்தெழுந்தவர் ஜெயலலிதா" எனப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவைக்கு வராமல் புறக்கணிப்பு செய்துள்ளன. ஜெயலலிதாவின் புகைப்படத் திறப்பு விழா அரசியல் களத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தால் குற்றவாளி என்று கூறப்பட்டவருடைய புகைப்படத்தை திறந்துவைத்திருப்பதா? எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் 'சட்டப் பேரவை கரும்புள்ளிப் பிரசாரம்' என்ற எதிர்ப்பு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, ''சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியின் புகைப்படத்தை திறந்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். தமிழக அரசின் இந்தச் செயல்பாடு எதிர்காலத்துக்குத் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதன் காரணமாகவே இந்த எதிர்ப்புப் பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். குறிப்பாக 

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்குபேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுவும் கூட்டுச்சதி செய்து இந்தக் குற்றத்தை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இதில் ஜெயலலிதா உயிரோடு இல்லை. இருந்திருந்தால் அவரும் குற்றவாளிதான். இந்த விவரங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்கும்போது அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, பொதுமக்களுக்கு எதுவும் தெரியாது போன்று அவருடைய புகைப்படத்தை திறந்துவைத்துள்ளது.
வைரவிழா கண்ட பாரம்பர்யமிக்க தமிழகச் சட்டசபையில் குற்றவாளியின் புகைப்படத்தை திறந்துவைத்திருப்பது சட்டப்பேரவைக்குக் கரும்புள்ளி. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தக் கரும்புள்ளி பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், லஞ்ச-ஊழல் எதிர்ப்புப் போராளிகள் உள்ளிட்ட பலரையும் ஒருங்கிணைத்து, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் பதிவையும் வெளியிட்டு வருகிறோம். வெள்ளைப் பின்புலம் கொண்ட பக்கத்தில் கருப்புப்புள்ளி இருப்பது போன்ற படத்தை கவர் பிக்சராகவும், புரொஃபைல் பிக்சராகவும் வைக்க அறிவுறுத்தியுள்ளோம்.
ஆளுங்கட்சிக்கு எங்களுடைய இயக்கத்தின் சார்பாக ஒரு கோரிக்கை. இப்படித்தான் முதலமைச்சர்கள் இருக்கவேண்டும் என நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்த ஓமந்தூரார், காமராஜர் போன்றவர்களின் படத்தை ஒருபக்கம் வைத்துவிட்டு, மற்றொருபக்கம் இவரைப் போன்று
பொதுச்சொத்தை கொள்ளையடித்து, சர்வாதிகார ஆட்சி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக ஜெயலலிதா படத்தையும் மாட்டிவையுங்கள் என்பதே அந்தக் கோரிக்கையாகும். பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மாட்டி வைக்கும் புகைப்படத்தில் இருப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள் அல்ல... எனவே சட்டமன்றத்தில் தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மாட்டிவைக்கும் புகைப்படமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்'' என்றார் . 
 
இது குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த சுபத்ரா பேசுகையில், " ஊழல் செய்து விட்டு சிறை சென்ற குற்றவாளியின் புகைப்படத்தைத் திறந்துவைத்துள்ள தமிழக அரசின் செயல்பாடு எத்தகையது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பாரம்பர்ய மதிப்புமிக்க சட்டமன்றத்துக்கு நாம் அனுப்பிய பிரதிநிதிகள் எப்படிப்பட்டவர்கள் அவர்களுடைய தர்மம் என்ன... என்பதை இன்றைய நிகழ்வு உணர வைத்துள்ளது. ஜெயலலிதாவின் புகைப்படத்தைத் திறந்துவைத்து சட்டமன்றத்தில் குற்றவாளியின் புகழ்பாடத் தொடங்கியுள்ளதால், இனி சட்டமன்றம் என்று அழைப்பதைவிட குற்றமன்றம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் திருடர்கள், கொலைகாரர்கள் படங்கள் இருப்பதுபோன்று தற்போது சட்டசபையில் ஊழல்வாதியின் படத்தை வைத்துள்ளனர். அந்தப் படத்துக்குக் கீழே திருடர்கள் ஜாக்கிரதை எனப் போட்டுவிட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும்'' என்றார் கோபமாக.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.