Latest News

இது ஃபேஷனுக்கான தருணம் அல்ல!" பணியிட பாலியல் தொல்லைக்கு எதிரான அமெரிக்க பெண்களின் குரல்

இந்த வருடம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்தமாகச் சர்வதேச அளவில் பெண்கள் அணிதிரண்டுள்ளனர். நடாலி போர்ட்மேன், எம்மா ஸ்டோன் மற்றும் ரீஸ் விதர்ஸ்பூன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை சார்ந்தவர்கள் என 300 பேர் இணைந்து சினிமாத் துறை மற்றும் பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.
13 மில்லியன் டாலர் தொகையை இந்தச் சேவைக்காக அவர்கள் நிதியாகத் திரட்டியுள்ளனர். "இந்த நிதி, குறைவான சம்பளத்துக்குப் பணிபுரியும் பெண்களுக்கு... பாலியல் வன்முறை மற்றும் அதைப் புகார் செய்வதன்மூலம் இருந்து வரும் விளைவுகள் ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்க உதவும்'' என்று அவர்கள் கூறியுள்ளனர். விழாக்களில் பணியாளர்களாகவும், பர்ஃபாமர்களாகவும் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பெண்கள் இந்தப் பிரசாரத்தை ஒரு படிவத்தில் கையெழுத்திட்டுத் தொடங்கிவைத்தனர். இவர்களுடன் ஆல்லே ஜட், ஈவா லாங்கோரியா, அமெரிக்கா ஃபெர்ரா, ரஷிதா ஜோன்ஸ் மற்றும் கெர்ரி வாஷிங்டன் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களும் கையெழுத்திட்டுத் தொடங்கிவைத்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான போராட்டங்கள், அவர்களின் தரத்தை உயர்த்துவது மற்றும் ஆண் ஆதிக்கத்தில் இருக்கும் பணியிடங்களில் சம உரிமைக்கு வித்திடுவது; இதற்கான நேரம் வந்துவிட்டது" என்று கடிதத்தின் ஒரு பகுதி கூறுகிறது. அதிகமான அதிகாரமும், பதவியும் இல்லாத மற்ற பெண்களுக்கு நாங்கள் போராடாவிட்டால் வேறு யார் போராட முடியும் என்று குரலை எழுப்பி... உலகின் பார்வையைப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மீதும், அதிலிருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தின் மீதும் திருப்பினர்.
கடந்த சில வருடங்களாகப் பெண்களின் பிரச்னை குறித்த நீண்ட போராட்டங்கள் பரவலாக மக்கள் மத்தியில் மையம்கொண்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இது, சாதாரண குடிமகன் தொடங்கி அமெரிக்க அதிபர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை. அதன் ஒரு பகுதியாகத்தான், 'டைம்ஸ் அப்' என்ற பிரசாரம் பாலியல் தொல்லைகளுக்கும், பாலின - ஊதிய வேறுபாடுகளுக்கும் குரல் கொடுக்கும் #MeToo இயக்கத்துக்கு ஒரு துணை புரியும் நோக்கில் தொடங்கப்பட்டது.
இதற்கான அமைப்பு லாஸ் ஏஞ்சல்ஸில் உருவானது. நியூயார்க் மற்றும் லண்டனில் இந்தக் குழு விரைவாக விரிவுபடுத்தப்பட்டு இப்போது குழுக்களாகப் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதத்தில் 7,00,000 பெண் விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் ஒரு திறந்த கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்த முயற்சியை அமைப்பாளர்கள் விரிவுபடுத்தினர். இந்த ஆண்டு, கோல்டன் குளோப்ஸில் ரெட் கர்பேட் விழாவில், பெண்களைக் கறுப்பு நிற உடை அணியும்படி அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். புகழ்பெற்ற எழுத்தாளர் ஈவா லாங்கோரியா, "இஃது, ஒற்றுமையின் தருணம், ஃபேஷன் தருணம் அல்ல" என்று தெரிவித்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலில் விதர்ஸ்பூன், மெரீல் ஸ்ட்ரீப், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் அவரது மனைவி கேட் காப்ஷோ ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
பொதுவாக, ஆண்களால் இயங்கும் தொழிற்சாலைகளில் 2020-ம் ஆண்டுக்குள் அமெரிக்கக் குழுமங்களில் சமமான பிரதிநிதித்துவம் என்ற இலக்கை நிர்ணயித்துச் செயல்பட்டு வருகிறது டைம்ஸ் அப். ''இந்த இலக்கை அடைய அமெரிக்காவிலிருந்து ஒரு பெரிய முழக்கமாக டைம்ஸ் அப் அமைப்பும், Me too-வும் இணைந்து செயல்படும்'' என்று அவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, இந்தப் புத்தாண்டின் ஆரம்பகட்டமாக 300 பேருடன் அந்தப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ள இவர்களுக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிகின்றன. இந்த வருடத்தின் பெண்கள் பாதுகாப்புக்கான முதல் குரல் இது!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.