Latest News

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தொடரும் மாணவர்கள் போராட்டம்!

தமிழக அரசு உயர்த்தி உள்ள பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்தியது . இதே போல் தனியார் பேருந்துகளும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதியளித்தது. இரவோடு இரவாக 50 சதவிகிதத்துக்குப் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துப் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டம் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பேருந்துக் கட்டண உயர்வினை திரும்பப் பெறக் கோரி இன்று (24ம் தேதி) கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பரமக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரியைச் சேர்ந்த மாணவ- மாணவிகளும் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் சுரேந்திரன் கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ஆத்ம கார்த்தி, சண்முக ராஜா, பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.