Latest News

தர லோக்கலாய் திட்டிக் கொள்ளும் ஜெயக்குமார் - மதுசூதனன் கோஷ்டிகள்: வடசென்னையில் அசிங்கப்படும் அ.தி.மு.க.வின் தன்மானம்.

தமிழக அரசியலில் இப்போது செம்ம டிரெண்டிங்கில் இருப்பது ‘தரக்குறைவாக பேசுவது யார்?’ என்பது பற்றிய அலசல்தான்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒருமையில் திட்டுவதாகவும், தான் என்றுமே தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகிப்பதில்லை என்றும் தினகரன் சமீபத்தில் புலம்பிக் கொட்டினார். இதே சூழலில் ஸ்டாலினும் மேடைப்பேச்சு நாகரிகம் குறித்து வகுப்பெடுத்து வருகிறார். தினகரனின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கவுண்ட்டர் கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறார். 

ஆக தமிழக அரசியலில் ‘தரக்குறைவு’ பேச்சு விவகாரம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க.வினுள் நடக்கும் ஒரு உள்குத்து இப்போது பப்பரப்பம்! என பளீச்சென வெளியே தெரிந்திருக்கிறது.

அதாவது ஆளுங்கட்சியில் வடசென்னையின் காட்ஃபாதர் யார்? நீயா நானா? என அமைச்சர் ஜெயக்குமாருக்கும், அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் இடையில் பெரும் போர் நடப்பது தெரிந்த சேதியே. மதுசூதனனுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சீட் தந்தால் அவர் வெல்வார், வென்றதும் அவரை பன்னீர் அமைச்சராக்குவார், அமைச்சராகும் மதுசூதனன் தனக்கு இடையூறாக வடசென்னையில் அதிகார லாபி செய்வார்! என்று கடுப்பானார் ஜெயக்குமார். அதனால்தான் மதுவுக்கு இடைத்தேர்தலில் டிக்கெட் தரப்படக்கூடாது என்று ஒற்றைக் காலில் நின்றார்.

ஆனால் அதையும் மீறி பன்னீரின் வலியுறுத்தலால் மதுசூதனனுக்கு சீட் தரப்பட்டது. இதில் மது டீமுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் ‘உள்குத்து வேலையால் எங்கள் வெற்றியை பாதிப்பார்கள்’ என்று சொந்தக்கட்சி பங்காளிகள் மேலே துவக்கத்தில் சந்தேகப்பட்டார்கள்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தினகரனின் இமாலய வெற்றியால் மோசமாக தோற்றார் மதுசூதனன். தோல்விக்கு காரணங்களை ஆராய வேண்டும் என்று சமீபத்தில் முதல்வருக்கு மதுசூதனன் எழுதிய கடிதத்தில் கூட அமைச்சர் ஜெயக்குமார் பற்றி குறைபட்டிருக்கிறார் என்று தகவல் உண்டு. இரண்டு மூன்று நாட்களாக பெரிதாய் தலை உருட்டப்பட்ட இந்த விவகாரம் பின் அடங்கியது.

ஆனால் உண்மையில் வெளிப்பார்வைக்குதான் அது அடங்கியிருக்கிறது, உள்ளே ஜெயக்குமார் மற்றும் மதுசூதனன் இரு தரப்புக்கும் இடையில் மிக உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்த அ.தி.மு.க.வினர். அதற்கு உதாரணமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது வடசென்னை அ.தி.மு.க.வுக்குள் நடக்கும் வாட்ஸ் அப் கலாட்டாவைத்தான்.
அதாவது ஜெயக்குமார், மதுசூதனன் என இரண்டு தரப்புகளின் ஆதரவாளர்களும் தங்களது டீமை வைத்து தனித்தனி வாட்ஸ் அப் குரூப்புகளை நடத்துகின்றனர். இதில் இரண்டு டீமும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் திட்டித் தீர்க்கின்றனர். திட்டு என்றால் சாதாரண வார்த்தைகளில்லை, வாசித்தால் வாய் வெந்துவிடும், கேட்டால் காது கருகிவிடுமளவுக்கு வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் மாறி மாறி  தாக்கிக் கொள்கிறார்களாம்.
இதை தங்களுக்குள் மட்டும் செய்து கொள்ளாமல் அரசியலில் இல்லாத தங்களின் பொது நண்பர்கள் குரூப்பிலும் போட்டுவிட்டு பரஸ்பரம் அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அவலமே.

ஜெயக்குமாருக்கு மது கோஷ்டி ஒரு மோசமான வார்த்தையை பட்டப்பெயராக வைப்பதும், பதிலுக்கு மதுவுக்கு ஜெயக்குமார் கோஷ்டி மிக மோசமான வார்த்தையை பட்டப்பெயராக வைப்பதுமாக ஓடிக் கொண்டிருக்கிறது விவகாரம். தர லோக்கலான மீம்ஸ்களுக்கும் குறைச்சலில்லையாம்.

இவர்கள் நடத்திக் கொள்ளும் இந்த கெட்ட கேவலமான யுத்தத்தை இரு தரப்புகளின் தலைமைகளுக்கும் நல்லாவே தெரியுமாம். ஆனாலும் தடுப்பதில்லை என்பதுதான் ஹைலைட்!

இன்னாமே ஷோக்காகீதுல்ல மம்மி கட்சி பாலிடிக்ஸு!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.