Latest News

பணமதிப்பு நீக்கம் கற்றுத் தந்த மறக்க முடியாத பாடம்!

"எனதருமை நண்பர்களே, இன்று இரவு முதல் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால், சாமானியர்கள் நிறைய கஷ்டங்களைச் சந்திக்கவேண்டி வரும். ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்குச் சாமானியர்கள் இந்தக் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். குடிமக்கள் எப்போதும் நாட்டுக்காகத் தியாகங்களைச் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். நாட்டைச் சுத்தப்படுத்துவதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். விரைவில் இதன் பயனைக் குடிமக்கள் அடைவார்கள்’’ - 2016 நவம்பர் 8 அன்று இரவு, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் சொன்ன வார்த்தைகள் இவை.

இதோ, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துவிட்டது. எளிதில் மறக்க முடியாத நிகழ்வு அது. ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் நேரடித் தாக்கத்தை உணர்ந்தது. கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்த 85% ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரே இரவில் அறிவிக்கப்பட்டது. கள்ளநோட்டுப் புழக்கத்தை ஒழிப்பது, கறுப்புப் பணத்தை ஒழிப்பது, தீவிரவாதத்துக்கு வரும் நிதியை ஒழிப்பது என்று பிரதமர் மோடி மூன்று முக்கியக் காரணங்களை முன்வைத்தார். கடந்த ஓராண்டில் இந்த இலக்குகள் எட்டப்படவில்லை என்பது வேறு விஷயம். இந்நடவடிக்கை சாமானிய மக்களை எந்த அளவுக்குப் பாதித்துவருகிறது என்பதைப் பார்க்கும்போது, அதன் தோல்வியை முழுமையாக உணர முடிகிறது.

தொழிலாளியான முதலாளி

திருப்பூரைச் சேர்ந்த முருகேசனின் கதை ஓர் உதாரணம். பெரிய நிறுவனத்திடம் குத்தகை எடுத்து உபதொழில் பார்த்துவந்தவர் அவர். அவரிடம் 10 பேர் பணிபுரிந்துவந்தனர். பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் அவரது தொழில் முடங்கிவிட்டது. வருமானம் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார். திருப்பூரில் பெரிய அளவிலான ஆடை நிறுவனங்களை விட உபதொழில் சார்ந்த தொழில் நிறுவனங்களே அதிகம். ‘பட்டன்’ வைப்பது, ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவது என்று கிட்டத்தட்ட 1,200 சிறு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. அத்தனை நிறுவனங்களும் மீள முடியாத அளவுக்கு அடிவாங்கியிருக்கின்றன.

பெரிய நிறுவனங்கள் தங்களது ஏற்றுமதிக்கான தொகையைப் பணமில்லாப் பரிவர்த்தனை மூலமாகப் பெற்றாலும் இதுபோன்ற உபதொழில்களுக்கு ரொக்கப் பரிவர்த்தனை மூலமாகவே பணத்தை அளித்துவந்தன. ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும். எல்லாம் தினக் கூலிகள். அன்றன்றைக்கு ஊதியம் வழங்க வேண்டும். பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, ரொக்கத் தட்டுப்பாடு அதிகரித்தது. பெரிய நிறுவனங்கள் இந்த உபதொழிலுக்கு ரொக்கமாகப் பணத்தை வழங்க முடியவில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை பறிபோனது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. இதோ, ஒரு தொழில்முனைவோராகத் தன்னை உருவாக்கிக்கொள்ள முயற்சித்த முருகேசன், இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் மாதம் ரூ.10,000 ஊதியத்துக் குப் பணிபுரிந்துவருகிறார்.

திருப்பூர் மட்டுமல்ல, இந்தியாவில் இதுபோன்ற தொழில் நகரங்கள் அனைத்திலுமே லட்சக்கணக்கில் வேலை பறிபோயுள்ளது. தினசரி வியாபாரிகள் தங்களது பிழைப்பை இன்றளவும் மீட்டெடுக்க முடியாமல் தவித்துவருகின்றனர். பாய் வியாபாரி முதல் காய்கறி வியாபாரி வரை பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய முடியாமல் தவித்துவருகின்றனர்.

சேகர் ரெட்டியும் பணமதிப்பு நீக்கமும்

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது ஒரே ஒரு 2,000 ரூபாய் நோட்டைப் பெறுவதற்கு நாள் முழுவதும் வங்கி முன்னால் சாதாரண மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நகர்ப்புறங்கள், இரண்டாம் நிலை நகரங்கள் என அனைத்திலும் வங்கி வாசல்களில் காத்துக் கிடந்த மக்கள் கூட்டம் ஏராளம். இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன. ஒரு மாதம் கழித்தும் 2,000 ரூபாய் நோட்டைப் பார்க்காதவர்கள் உண்டு. ஆனால், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட ரூ.142 கோடிக்கும் மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதில் ரூ.9 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ.35 கோடி மதிப்புள்ள புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவ்வளவு தொகை கொண்ட நோட்டுகள் அவர்களிடம் எப்படிச் சென்றன என்பது பற்றி அரசுத் தரப்பிலோ ரிசர்வ் வங்கித் தரப்பிலோ ஒரு அறிக்கைகூட இன்று வரை வெளிவரவில்லை. இங்கேதான் எதற்காகப் பணமதிப்பு நீக்கம்.. யாருக்காகப் பணமதிப்பு நீக்கம் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது.

ஒருபுறம் மக்கள் ஒரு 2,000 ரூபாய் நோட்டுக்காக நாள் முழுவதும் வரிசையில் நிற்பதும், மறுபுறம் கட்டுக்கட்டாகப் புதிய நோட்டுகள் முக்கிய நபர்களின் வீட்டில் கைப்பற்றப்படுவதும் மிகப்பெரிய முரணாக இருக்கிறது அல்லவா? கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யார் என்று அரசுக்குத் தெரியாதா என்ன? ஆனால், அரசு இயந்திரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆட்சியாளர்கள், அவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்காமல், ஏழைகள், சிறுதொழில் வணிகர்கள், முதியோர், குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் கடுமையாகப் பாதிக்கும் வகையில் ஒரு நடவடிக்கை எடுப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

கறுப்பு வரலாறு

வரலாறு எல்லா நடவடிக்கைக்கும் எல்லா காலகட்டத்திலும் நமக்கு பாடத்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை யும் அப்படித்தான். 1970 -ல் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகப் பணமதிப்பு நீக்கம் செய்யப் பரிந்துரை செய்தது நிரஞ்சன் நாத் வாஞ்சு கமிட்டி. ஆனால், மிக தைரியமான முடிவுகளை எடுப்பவராக அறியப்பட்டவரான அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அந்த முடிவை எடுக்கவில்லை. வங்கதேசத்தில் போர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், இந்தியப் பொருளாதாரச் சூழல் ஆகியவற்றை உணர்ந்திருந்ததால் அவர் அதற்குத் துணியவில்லை.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில், அதாவது 1978 ஜனவரி 14-ல் அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய் மற்றும் நிதியமைச்சர் ஹெச்.எம்.படேல் இருவரும் பணமதிப்பு நீக்க முடிவை எடுத்தனர். புழக்கத்திலிருந்த 1,000 ரூபாய், 5,000 ரூபாய், 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தனர். இந்த நடவடிக்கை குறித்து 1980-களில் தேசியப் பொது நிதி மற்றும் கொள்கை கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை முற்றிலும் தோல்வி என்பது தெரியவந்தது.

“கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்ற நல்ல நோக்கத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், மொத்தக் கணக்கில் வராத சொத்துக்களில் கறுப்புப் பணத்தின் அளவு மிகக் குறைவு. கறுப்புப் பணம் உருவாவதைத் தடுப்பதற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை எந்த வகையிலும் உதவி செய்யாது” என்று ஆய்வு முடிவில் கூறியிருந்தது.

தற்போது எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் தோல்வியில் முடிந்திருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. 99% பணம் வங்கிக்கே திரும்பி யிருக்கிறது. வங்கிக்குத் திரும்பிய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி. இப்படி எல்லா வகையிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந் நடவடிக்கை. வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறது மத்திய அரசு. இப்படி ஒரு நடவடிக்கையை அரசு எடுத்தது ஏன், இந்நடவடிக்கையின் மூலம் பெரும் துன்பத்தை அனுபவித்த மக்களின் வலிக்கு என்ன மருந்து என்ற கேள்விகள் விடையில்லாமல் தொடர்கின்றன!
- தேவராஜ் பெரியதம்பி,
தொடர்புக்கு: devaraj.p@thehindutamil.co.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.