Latest News

எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.. காது கொடுங்கள்!

தமிழ்நாட்டில் சமீப காலமாக நடந்துவரும் சில சம்பவங்கள் ஒரு சகிப்பின்மை காலகட்டத்துக்குள் நாமும் நுழை கிறோமோ என்ற கேள்வியை எழுப்புகின்றன. ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் மீதான சிறு விமர்சனம் வந்தாலும் கொந்தளித்து, தங்கள் கையில் இருக்கும் அதிகாரத் தைக் கருத்தாளர்களுக்கு எதிராக ஏவுவது அவரவருக்குள் இருக்கும் சகிப்பின்மையையே வெளிப்படுத்துகிறது. ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், நீதித் துறையினர் யாவருக்கும் இது பொருந்தும். சூழும் மோசமான போக்குக்கு ஒரு பருக்கை பதம் கேலிச்சித்திரக்காரர் பாலா கைது நடவடிக்கை!
திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து இறந்தது தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரையுமே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு சம்பவம். கந்துவட்டிக் கொடுமைதான் இதற்கான காரணம் என்பது வெட்ட வெளிச்சமானது. மக்கள் ஏன் வெளியில் அதீத வட்டிக்குக் கடன் வாங்குகிறார்கள் என்றால், இவ்வளவு வங்கிகள் பெருகியும் சாமானியர்களை, எளிய மக்களை வங்கிக் கடன்கள் எட்டும் அளவுக்கு நம்முடைய அமைப்பின் மனம் இளகவில்லை என்பதே அதற்கான ஒரு வரி பதில். அமைப்புசாராத் துறையிலிருந்து வரும் பலன்களை அறுவடை செய்யத் திட்டமிடுவதில் நூற்றில் ஒரு பங்கு அக்கறையைக்கூட அமைப்புசாராத் துறையினருக்கு விதைப்பதில், அவர்களை வளர்த்தெடுப்பதில் காட்டுவதில்லை என்பது யாவருக்கும் தெரிந்தது.

ஒரு குடும்பமே தீ வைத்துக்கொண்டு கண் முன் கருகுகிறது, ‘இந்தச் சூழலை எதிர்கொள்ள நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்’ என்று கேட்காமல் கேட்கிறது. மனசாட்சியுள்ள எவரையும் அந்த நெருப்பு சுடத்தான் செய்யும்; கொந்தளிக்கத்தான் வைக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எழுதித் தீர்த்தார்கள். அரசியல்வாதிகள் பேசித் தீர்த்தார்கள். கேலிச்சித்திரக்காரர் என்ன செய்வார்? கேலிச்சித்திரம்தான் வரைவார்! ‘கேலிச்சித்திரத்தில் கேலி செய்துவிட்டார்கள்!’ என்று ஆத்திரப்படுவதில் அர்த்தம் ஏதும் உண்டா? கேலி செய்வதுதானே கேலிச் சித்திரம்! பாலாவைக் கைதுசெய்ததன் மூலம் என்ன பலனைக் கண்டது தமிழக அரசு? அதுவரை சில ஆயிரம் பேரை மட்டுமே சென்றடைந்திருந்த அந்தக் கேலிச்சித்திரம், லட்சக்கணக்கானோரைச் சென்றடையவும், நாடு முழுவதும் ‘சகிப்புத்தன்மையற்ற அரசு’ என்று பேசவும் தானே முன்னின்று வழிவகுத்துக் கொண்டது!

எரிவாயுத் திட்டத்துக்கு எதிராகத் துண்டறிக்கைகள் விநியோகித்த சேலம் கல்லூரி மாணவி; இலங்கைப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுக் கூட்டம் நடத்த முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் ஆகியோர் குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டது; எரிவாயு திட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டுவரும் பேராசிரியர் த.செயராமன் எழுதிய புத்தகத்துக்கான தடை மற்றும் அவர் மீதான தேச துரோகக் குற்ற வழக்குப் பதிவு, திருநெல்வேலியைச் சேர்ந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர் செம்மணியைக் காவல் துறையினர் கையாண்டிருக்கும் விதம் இவை எதுவும் சரியான அறிகுறிகள் அல்ல. தன்னுடைய பள்ளி நாட்களில் படித்த திருக்குறளை ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுவது சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும். ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்!’

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.