Latest News

முறையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை எனில் எதற்காக நலத் திட்டங்கள்? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

 
மக்கள் நலத்திட்டங்களை முறையாக அமல்படுத்தவில்லை என்றால் எதற்காக அத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வீடற்றோருக்கான நலத்திட்டங்கள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகள் மீது விமர்சனம் எழுப்பியது.

ஆயிரம் கோடிக்கணக்கான தொகையை செலவிட்டும் நலத்திட்டங்கள் முறையாகச் சென்றடைவதில்லை, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது, இது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற வீடற்றோருக்கு புகலிடம் வழங்கும் நலத்திட்டம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசை பிரதிநிதித்துவம் செய்ய்ம் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் நட்கர்னியிடம் நீதிபதிகள் கேட்கும் போது, “ஏன் நீங்கள் திட்டங்களை நிறுத்தக் கூடாது? ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்கிறீர்கள்? இதனை நாடு வேறு முக்கிய நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாமே. இது மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்வதாகும், இது அதிர்ச்சியளிக்கிற்து” என்று தெரிவித்தனர்.

மேலும் நகர்ப்புற வீடற்றோர் மீது மத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு கருணை இல்லை, அவர்களிடத்தில் கொஞ்சம் கருணை காட்டுங்கள் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உத்தரப்பிரதேசம், ஹரியாணா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் நகர்ப்புற வீடற்றோருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த மாநிலங்களுக்க்கு ஒதுக்கிய தொகைகளின் செலவுக்கணக்கு விவரங்களை அளிக்காததை நீதிமன்றம் கண்டித்தது.

இது மிகவும் கவலையளிக்க கூடிய அலட்சியமான போக்காகும் என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், வீடற்றோரு விவகாரத்தில் மாநில அரசு உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். ஏழை மக்கள் கடினப்பாடுகளை அரசுகள் கண்டு கொள்வதில்லை என்ற தோற்றத்தையே இத்தகைய செயல்கள் காட்டுகின்றன, என்று சாடினர்.

“தேவையுள்ளவர்களுக்கு உதவ முயற்சி செய்கிறோம். அவர்களிடத்தில் கொஞ்சம் கருணை காட்டுங்கள். சிறிதளவு கருணை” என்று வேதனையுடன் குறிப்பிட்டதோடு மத்திய அரசை நோக்கி, “நீங்கள் நல்ல திட்டங்களை உருவாக்குகிறீர்கள், ஆனால் உங்களால் அதனை முறையாகச் செயல்படுத்த முடியவில்லை எனில் எதற்காக இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன?” என்று கேள்வி எழுப்பினர்.

மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்து அளிப்பதோடு தங்கள் வேலை முடிந்து விட்டது என்று மத்திய அரசு கைகழுவி விடக் கூடாது என்று மத்திய அரசையும் அறிவுறுத்தினர்.

ஹரியாணா அரசு அளித்த விவரங்கள் குறித்து வலுவான் ஆட்சேபணை எழுப்பிய உச்ச நீதிமன்றம், பல விஷயங்கள் விளக்கப்படவில்லை, எனவே தலைமை செயலர் நீதீமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்த வரையில் நீதிமன்றம் நியமித்த குழுவின் அறிக்கையின்படி மாநிலத்தில் 1.8 லட்சம் நகர்ப்புற வீடற்றோர் உள்ளனர், இவர்களுக்கான புகலிட இல்லங்களின் கொள்ளளவு 6,000 மட்டுமே.

இதற்கு உத்தரப்பிரதேச மாநிலம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசிடமிருந்து பெற்ற தொகை, அதன் மீதான செலவுகள் குறித்த விரிவான விவரங்களை மாநில அரசு சமர்ப்பிக்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மனுதாரர் சார்பாக ஆஜரான பிரசாந்த் பூஷன், “உ.பி. அரசு பசுப்பாதுகாப்பில்தான் கவனம் செலுத்துகிறது, வீடற்றோர் மீதல்ல” என்றார், இதற்கு மாநிலம் சார்பு வழக்கறிஞர் உடனே, “இங்கு அரசியலை கொண்டு வராதீர்கள்” என்று பதில் அளித்தார்.

மேற்கு வங்க மாநிலமும் இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
“உங்கள் அதிகாரிகளிடம் பேசுங்கள், வீடற்றோருக்கு கொஞ்சம் இதயக் கனிவை காட்டுங்கள், இது பற்றி எப்படி கவலையற்று இருக்க முடிகிறது. இவர்கள் எண்ணிக்கையும் குறைவுதான்” என்று நீதிபதிகள் கூறினர்.
மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் வழங்கும் தொகை நேரடியாக வீடற்றோருக்குச் செல்ல வேண்டும், இது குறித்து கமிட்டி அமைத்து பார்வையிடவும் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து 2 வாரங்கள் தள்ளி அடுத்த விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.