Latest News

ரஷ்ய புரட்சி 100: அப்போது புதுயுகம் பிறந்தது!


றட்சியால் பாதிக்கப்பட்டுக் கடன்காரர்களாக இருக்கும் விவசாயிகள் தங்களது கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி போராடிக்கொண்டிருக்கிறார்கள்... எரிவாயுத் திட்டங்களுக்காகத் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சி, ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்… நகரங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதேனும் குரல்கள் ஒலிக்கிறதா என்றால் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை.

அல்லது ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிற வலிமை அந்தக் குரல்களுக்கு இல்லை. உழைப்புச் சுரண்டலின் வெவ்வேறு வடிவங்களால் வஞ்சிக்கப்படுபவர்களுக்கு இடையில் பரஸ்பர ஆதரவோ உரையாடலோ இல்லாமல் போனதன் விளைவுகளைத் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆக, தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியுமா?
பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச சோஷலிஸ்ட் புரட்சி ரஷ்யாவில் தொடங்கியதன் 100-வது ஆண்டு இது. ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் தொடங்கி நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என்று வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைக் கடந்துவந்த மனிதகுல வரலாற்றில் ரஷ்யாவில்தான் சமதர்மத்துக்கான புதுயுகம் பிறந்தது. விஞ்ஞான சோஷலிஸத்தின் மூலவர்களான கார்ல் மார்க்ஸும் ஃப்ரெடரிக் எங்கெல்ஸும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிலிருந்துதான் சோஷலிஸத்தை நோக்கிய முன்னகர்வு இருக்கும் என்று கணித்திருந்தார்கள்.

ஆனால், அதற்கு மாறாக நிலவுடைமைச் சமூக அமைப்பிலிருந்து முதலாளித்துவத்தை நோக்கி ரஷ்யா நகர்வதற்கு முன்பே அங்கு சோஷலிஸக் கனவு முகிழ்த்தது. அப்போதைய உலகப் போர்ச் சூழலும் ரஷ்யாவில் புரட்சியை முன்னெடுத்த லெனின் தலைமையிலான புரட்சிகரப் பொதுவுடைமைக் குழுவினர் அச்சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு வகுத்த வியூகங்களும் முக்கியமானவை. எனினும், ரஷ்யப் புரட்சி சோவியத் ஒன்றியமாக உருவெடுத்ததற்கும் உலகத்தையே சோஷலிஸப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றதற்கும் அடிப்படை, தொழிலாளர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையில் இருந்த ஒருங்கிணைவுதான்.

என்ன செய்தார் லெனின்?

ரஷ்யப் புரட்சியைக் காட்டிலும் அந்தப் புரட்சி வெற்றி பெற்றதற்குப் பிறகான ஆண்டுகள் மிக முக்கியமானவை. ரஷ்யா விவசாய உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டிருந்த நாடு. ஆனால், நிலவுடைமையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது அவ்வளவு எளிதானதல்ல. விவசாயிகளிடத்தில் ஒருங்கிணைவு ஏற்படுத்துவதும் எளிதானதல்ல. நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களிடையே இயல்பாகவே ஒருங்கிணைவு நடக்கிறது. தாம் சுரண்டப்படுவதை எதிர்த்துக் கேள்வியெழுப்புவதற்கான சக்தி அந்த ஒருங்கிணைப்பிலிருந்தே கிடைக்கிறது.
கிராமப்புறங்களில் நிலவுடைமையாளர்களிடம் சிக்கிக் கிடக்கும் விவசாயக் கூலிகளிடம் அது சாத்தியமில்லை. அதனாலேயே விஞ்ஞான சோஷலிஸத்தின் மூலவர்கள் தொழில் உற்பத்தி சமூகங்களிலேயே சோஷலிஸத்துக்கான வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்தார்கள்.
ரஷ்யப் புரட்சியை முன்னின்று நடத்திய லெனின் இதை மிகச் சரியாக அறிந்துவைத்திருந்தார். எனவேதான், ரஷ்யப் புரட்சியின் போதாமைகளை இட்டுநிரப்ப அவரால் முடிந்தது. நகர்ப்புறத் தொழிலாளிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் கட்சியின் கட்டுப்பாட்டில் வழிநடத்தினார். 

நவம்பர் புரட்சியின் முதலாண்டு விழாவையொட்டி அவர் பங்கேற்றுப் பேசிய பல்வேறு நிகழ்வுகளில் மீண்டும் மீண்டும் உழைப்பாளர்களின் ஒருங்கிணைவைப் பற்றியே அவர் பேசியிருக்கிறார். அந்த உரைகளில் யாதொன்றிலும் அவர் புரட்சியின் வெற்றியைப் பற்றி பிரஸ்தாபிக்கவில்லை. ஜார் மன்னரின் கொடுங்கோலாட்சிக்குப் பரணி பாடி மகிழவில்லை. மாறாக, ரஷ்யா எதிர்கொண்டிருக்கும் சர்வதேச அளவிலான சவால்களைப் பற்றியும் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றியுமே மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

“தொழிலாளி வர்க்கம் பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகித்து நடத்துவது என்பதை அறிந்துகொண்ட பின்பே, உழைக்கும் மக்களின் அதிகாரம் உறுதியாக நிலைநாட்டப்படும்போதே, சோஷலிஸம் உருப்பெற்றுக் கெட்டிப்பட முடியும். இவை இல்லையேல், சோஷலிஸம் வெறும் கற்பனையே” என்று அப்போது ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார் லெனின். பொருளாதாரத்தை நிர்வகித்து நடத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள்தான் சோஷலிஸப் புரட்சிக்குத் தடைக்கல்லாக அமையக்கூடும் என்பதையும்கூட அவர் அனுமானித்திருந்தார் என்று புரிந்துகொள்ள முடியும். சோஷலிஸப் பாதைகளில் சந்தித்திருக்கும் இடறல்கள் எல்லாமும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள்தான் என்று எளிய விளக்கத்தையும்கூட நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஒரு கேள்வி… ஒரு நம்பிக்கை…

நவம்பர் புரட்சியையொட்டி லெனின் ஆற்றிய உரையொன்றில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: “ஏகாதிபத்தியக் கழுகுகள் இன்னும் நம்மைவிட பலமானவை என்பதை நாம் அறிவோம். அவை இன்னும் நம் மீதும் நமது நாட்டின் மீதும் ஒரேயடியான சேதத்தை, கொடுமைகளை, அட்டூழியங்களை விளைவிக்க முடியும். ஆனால், உலகப் புரட்சியை அவற்றால் தோற்கடிக்க முடியாது” ரஷ்யாவில் நடந்த சோஷலிஸப் புரட்சி தோல்வியை நோக்கித் தள்ளப்படலாம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அது முடிவல்ல, தாம் எதிர்நோக்கியிருப்பது உலகம் தழுவிய ஓர் புரட்சியை என்பதை அவர் அடிக்கோடிட்டுச் சென்றிருக்கிறார். 

ரஷ்யாவில் சோஷலிஸம் தோற்றுவிட்டது என்று எக்காளமிடுபவர்களுக்குப் பதிலாகவும் இந்த வார்த்தைகளைக் கொள்ள முடியும். சோஷலிஸ விதை உலகெங்கும் தூவப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பின் முகப்பிலும்கூட அந்த வார்த்தை இடம்பிடித்திருக்கிறது. வார்த்தைக்கான வரையறைகளை நாம் மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால், அந்த வார்த்தைக்கான வரலாறு அதன் உண்மையான அர்த்தத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

புரட்சி எதற்கு?

தற்போதைய ஜனநாயக ஆட்சிமுறையிலேயே சோஷலிஸம் சாத்தியமில்லையா என்ற கேள்விகளும்கூட எழலாம். லெனின் வார்த்தைகளில் அதற்குப் பதில் இருக்கிறது… “மிக மிக ஜனநாயகமான, மிக மிக சுதந்திரமான குடியரசிலும்கூட மூலதனம் ஆதிக்கம் செலுத்துகிறவரை, நிலம் தனியார் சொத்தாய் இருக்கிறவரை, அரசாங்கமானது எப்போதும் மிகச் சிறிய சிறுபான்மையோரின் கையிலேதான் இருக்கும்’.

ஒரு பொன்னுலகக் கனவுக்காக எத்தனை ஆயிரம் உயிர்கள் பலிகொடுக்கப்பட்டன? லட்சியவாதம், தியாகம் என்ற பெயர்களால் அவற்றை நியாயப்படுத்தலாமா என்று குமுறியெழும் வினாக்களின் அலைகளும் தொடர்கின்றன. சகமனிதர்களின் உழைப்பை ஈவிரக்கமின்றிச் சுரண்டித் தின்னும் முதலாளித்துவத்தின் கொடூர முகத்தைக் கண்டு மனம் வருந்தாதவர்களுக்கு அந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத் தங்கள் இன்னுயிரை அளித்தவர்களின் தியாகத்தை அலட்சியம் செய்வது அறமல்ல என்று எப்படி உணர்த்துவது?

எழுச்சிகளாலும் வீழ்ச்சிகளாலும் ஆனதுதான் வரலாறு. ஆனால், எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றிய வரலாறுகள் அனைத்தும் நிலப்பிரபுத்துவக் காலக்கட்டத்தின் வரலாறு. வரலாற்றுக் கண்ணோட்டத்தையே இன்று மாற்றியாகிவிட்டது. உழைக்கும் மக்களின் வரலாறு சமநிலைக்கானது. அங்கு வீழ்வதற்கும் எதுவுமில்லை. அதைப் போல அடைவதற்கும்கூட எதுவுமில்லை. சோஷலிஸத்தின் இலக்கு, உணர்ச்சிகரமான நாடகக் காட்சிகள் அல்ல, இயற்கையுடன் இயைந்த அனைவருக்கும் அனைத்திலும் சம உரிமை உள்ள இயல்பான சீரிய வாழ்க்கை. 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. பொருளாதாரத்தை நிர்வகிப்பதில், பல்வேறு தேசிய இனங்களை ஒருங்கிணைத்துச் செல்வதில், அரசியலமைப்பு அதிகாரங்களைக் கையாள்வதில் எவ்வளவோ இன்னும் கற்றுத்தேற வேண்டியிருக்கிறது. மார்க்ஸிடமிருந்தும் எங்கெல்ஸிடமிருந்தும் தத்துவங்களைப் பெறலாம். ஆனால், லெனினிடமிருந்து அரசியல் வியூகங்களை இன்னும் பொறுமையாகவும் உளப்பூர்வமாகவும் கற்றுத்தேற வேண்டியிருக்கிறது. 

முதலாளித்துவத்தின் மோசமான முன்னுதாரணங்கள் அரசியல் துறையில் பரவிக்கிடக்கின்றன. மாற்று அரசியலமைப்பை முன்னெடுப்பவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதையும் வரலாறு மெய்ப்பித்துவிட்டது, ஆனாலும் லெனின் நமக்கு மீண்டும் இப்படி நம்பிக்கை தருகிறார்:

‘முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்கவியலாதது - மனிதரை மனிதர் இனிமேலும் சுரண்ட முடியாத அமைப்பாகிய கம்யூனிஸத்துக்கு சமூகம் மாற்றமுறும்.’
-செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.