Latest News

சிவாஜி கணேசன் சிலை அகற்றத்தால் பெருத்த அதிர்ச்சி... அளவிடமுடியா பெருங்கோபம்: சீமான் கடும் கண்டனம்

  உண்மையே இல்லை
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை இரவோடு இரவாக அகற்றியது தமிழருக்கு இழைத்த அவமானம்; சிவாஜி சிலை அகற்றத்தால் பெருத்த அதிர்ச்சியும் அளவிட முடியா பெருங்கோபமும் ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்ப் பேரினத்தின் தனிப்பெருங் கலை அடையாளமாகத் திகழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலையை அதிக அளவில் காவல்துறையைக் குவித்து இரவோடு இரவாக மெரீனா கடற்கரைச்சாலையில் இருந்து அகற்றியிருப்பது பெருத்த அதிர்ச்சியையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இது சிவாஜி என்ற மாபெரும் கலைஞனுக்கு நேர்ந்த அவமானமில்லை

அவர் குடும்பத்திற்கு நேர்ந்த அவமானமில்லை, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நேர்ந்த அவமானம். மொழிப்போர் ஈகியர்கள், தமிழ் முன்னோர்கள் யாவரின் பெருமைகளையும், வரலாறுகளையும் சமகால இளைய தலைமுறை அறிந்திராவண்ணம் மூடிமறைக்கப்பட்டிருக்கிற தற்போதைய சூழலில் நடிகர் திலகத்தின் சிலையும் அகற்றப்பட்டிருப்பது உலகத்தமிழர்களின் உள்ளத்தில் உதிரத்தை வரவழைக்கிறது.

உண்மையே இல்லை போக்குவரத்து இடையூறு எனச் சிலை அகற்றத்திற்கு நியாயம் கற்பிக்கத் தமிழக அரசு சொல்லும் காரணத்தில் துளியும் உண்மையில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு இதே காரணத்தைச் சொல்லி சிலைதிறப்புக்குத் தடைபோட முயன்றபோது நீதிமன்றமே அக்காரணத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

உப்பு சப்பில்லா காரணம் கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் இன்னொரு வழக்கில் இதே காரணத்தைக் கூறி சிலை அகற்றத்தைக் கோரியபோது அன்றைய அரசின் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிலையை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டார். அதன்பிறகு, சில தினங்களிலே தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, சிலை அகற்றத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்திலே வாதாடத் தொடங்கிய தமிழக அரசு இன்றைக்குவரை அதே உப்புச் சப்பில்லா காரணத்தைச் சொல்லி வருகிறது.
காழ்ப்புணர்ச்சியே காரணம்
காழ்ப்புணர்ச்சியே காரணம் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுபானக் கடையை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்வரை அக்கடைகளை அகற்ற மறுத்து முரண்டுபிடித்த தமிழக அரசானது, தற்போது போக்குவரத்து குறித்தும், பாதுகாப்பான பயணம் குறித்தும் அதீத அக்கறை கொண்டிருப்பதாய் சொல்வது நகைப்புக்குரியதாகவே இருக்கிறது. நடிகர் திலகத்தின் சிலை அகற்றமானது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியின் விளைவாகவே நிகழ்ந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

என்ன தேவை? கடற்கரைச்சாலையில் இருந்த நடிகர் திலகத்தின் சிலையை அப்புறப்படுத்தியே தீர வேண்டும் எனத் துடியாய்த் துடிப்பவர்கள் அதனைக் காந்தி சிலைக்கும், காமராசர் சிலைக்கும் இடையே நிறுவி இருக்கலாமே? அதனைச் செய்யாது முழுமையாய் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது?

என்னதான் பிழை? தமிழக அரசுக்கு சிக்கலாய் இருப்பது நடிகர் திலகத்தின் சிலையா? இல்லை! நடிகர் திலகமா? இம்மண்ணுக்குத் தொடர்பேயற்ற இன்னும் சொல்லப்போனால் தமிழர்களுக்குத் துரோகம் விளைத்த அந்நியர்களின் சிலைகளெல்லாம் தமிழகம் முழுக்க அலங்கரித்துக் கொண்டு நிற்கையில் தமிழர்களின் கலையறிவை உலகுக்கு வெளிக்காட்டும் நடிகர் திலகத்தின் சிலை மெரீனாவில் இருப்பதில் என்ன பிழை?

உள்நோக்கம் இருக்கிறது? நடராசன், தாளமுத்து போன்ற மொழிப்போர் ஈகியர்களின் அடையாளங்கள் எப்படி மறைக்கப்பட்டதோ, அவர்களின் கல்லறைகள் எப்படிக் கேட்பாரற்றுக் கிடக்கிறதோ அத்தகைய நிலையை நடிகர் திலகத்துக்கும் ஏற்படுத்துவதற்கான சதிச்செயலோ என்ற ஐயம் எழுகிறது. சிவாஜி கணேசன் எனும் ஒப்பற்ற பெருங்கலைஞனை தங்களது கட்சிகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரசம், திமுகவும் இவ்விவகாரத்தில் போதிய அழுத்தம் கொடுக்காது இருப்பது அவர்களுக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதோ எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

வன்மையான கண்டனத்துக்குரியது தமிழ்ப் பெருங்கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை மணிமண்டபத்தில் நிறுவுவதில் நமக்கு எச்சிக்கலுமில்லை. அதேநேரத்தில், அதனை மெரீனா வீதியில் இருந்து அப்புறப்படுத்திதான் மணிமண்டபத்தில் நிறுவுவோம் எனும் அரசின் பிடிவாதப்போக்கில் துளியும் உடன்பாடில்லை. அது வன்மையான கண்டனத்திற்குரியது.

நாங்கள் நிறுவுவோம் ஆகவே, தமிழர்களின் உணர்வினை மதித்து அகற்றப்பட்ட நடிகர் திலகத்தின் சிலையை மெரீனா கடற்கரையிலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத்தவறும்பட்சத்தில் தமிழர்களின் அடையாளங்களை மறைத்து அழித்த படுபாதகச் செயலுக்குத் துணைபோன வரலாற்றுப் பெரும்பிழை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு வந்து சேரும் என எச்சரிக்கிறேன். இன்றல்ல என்றாலும் என்றாவது ஒருநாள் தமிழரின் அறம்சார்ந்த நாம் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தழைக்கும் அன்றைக்குத் தமிழர் அடையாளங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நடிகர் திலகத்திற்கு மாபெரும் சிலையை அதே இடத்திலேயே நிறுவுவோம் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன். இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.