Latest News

என்னை விமர்சிப்பதை விட்டுவிட்டு பழனிசாமியை விமர்சிக்க தயாரா? பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

 என்னை விமர்சிப்பதை விட்டுவிட்டு பழனிசாமியை விமர்சிக்க தயாரா?  பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக ரகசிய கூட்டணி அமைத்து ஓ.பன்னீர்செல்வம் பாடுபட்டார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எடப்பாடி தலைமையிலான அரசு ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது, என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், பிரதான எதிர்கட்சித் தலைவர் என்கிற முறையில் நானும், முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் குதிரை பேர அரசின் முகத்திரையை தினமும் கிழித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசி அலைகிறார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து டெல்லியில் உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் முயற்சிப்பது மட்டும் நன்கு தெரிகிறது.

கூவத்தூரில் மிகப்பெரிய கொண்டாட்டம் நடத்தி, கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தபோது ரகசிய கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பாடுபட்டவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அவரது சமாதியில் ஒரு மவுன விரத நாடகத்தை நடத்தி விட்டு, பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கொள்ள ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஓ.பன்னீர்செல்வம்.

ஒன்றுகூடி தமிழகத்தை கொள்ளையடித்த இரு அணிகளின் சார்பிலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் பா.ஜ.க. நிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைதூக்கி நின்றபோது எந்த மாதிரி ரகசிய கூட்டணியை எடப்பாடி பழனிசாமியுடன் அவர் வைத்துக் கொண்டார்? அதிமுக.வுக்குள் இரு அணிகளுக்கும் இடையில் உள்ள ரகசிய கூட்டணியின் வெளிப்பாடுதான் அப்படி இருவரும் டெல்லியில் நின்று காட்சியளித்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா?.

ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.89 கோடி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது பற்றி நான் பிரச்னை எழுப்பியபோது ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தான் இருந்தார். அப்போது ஏன் வழக்கு போட வேண்டும் என்று அவர் கேட்கவில்லை?.

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கேள்வி கேட்க துணிச்சல் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போய் நின்று கொண்டு ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய கூட்டணி என்று பேசுவது தி.மு.க.வுக்கு கிடைத்துவரும் மக்கள் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது டெல்லி ஆசான்களின் வழிகாட்டுதலில் கூறும் உப்புச்சப்பு இல்லாத குற்றச்சாட்டு.

மணல் குவாரிகள் ஊழல், பொதுப்பணித்துறை முறைகேடுகள், சேகர் ரெட்டி தொடர்புகள், முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே கூவத்தூரில் கோடி, கோடியாக பணம் கொடுக்க ரகசியமாக ஒத்துழைப்பு வழங்கியது போன்ற பயங்கரமான வழக்குகளில் தான் மாட்டிக்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில் தான் தப்பித்துக் கொள்வதற்காக இல்லாத கூட்டணியை இருப்பது போல் சித்தரிக்க முயலும் ஓ. பன்னீர்செல்வம் இந்த ரவுண்டிலும் தோல்வியை தழுவுவார் என்பதில் சந்தேகமில்லை.

எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் குதிரை பேர அரசு மீது சட்டமன்றத்தில் குற்றச்சாட்டுகளை வைக்க அஞ்சுவது ஏன்? தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி முதல்-அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நேருக்கு நேர் கேள்வி எழுப்ப ஏன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெம்பும், திராணியும் இல்லை?. ஆகவே தி.மு.க.வின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, டெல்லியில் உள்ளவர்களுக்கு ஆளவட்டம் போடும் முயற்சியை ஓ.பன்னீர்செல்வம் கைவிட வேண்டும்.

ஊழலில் ஒன்றாக திளைத்தவர்கள், துறைவாரியாக பட்டியல் போட்டு வசூலித்தவர்கள், சதவீத கணக்கில் காண்டிராக்டில் ஊழல் பணத்தை சேர்த்தவர்கள், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சசிகலா குடும்பத்துக்கு கும்பிடுபோட்டு கோடி, கோடியாக சம்பாதித்து கொடுத்தவர்கள் இன்றைக்கு புனித வேடம் போட்டுக் கொள்ளட்டும். அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை. ஆனால், அந்த ஊழலில் மூழ்கிக் கிடக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க.வை வம்புக்கு இழுக்க எந்த தகுதியும் இல்லை. மீண்டும் அதிகாரத்திற்கு வந்து விட்டால் இன்னும் 4 வருடம் கொள்ளையடிக்கலாமே என்ற ஆசையில் இணைந்து கொள்ள ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தும் ஓ. பன்னீர்செல்வம் பொதுக்கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால் முதலில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.