Latest News

ஒரே நிமிடத்தில் 50 கெட்ட வார்த்தைகள்... அப்படி இருந்த ஆறுக்குட்டி எப்படி மாறினார்??

 ஓபிஎஸ் விசுவாசி
கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய டிரைவர் கனகராஜை வைத்துத்தான் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஆறுக்குட்டியை எடப்பாடி தரப்பு மடக்கியதாக கூறப்படுகிறது.

கோவை, கொடீசியாவில் வரும் 29ம் தேதி பன்னீர்செல்வம் பங்கேற்க இருந்த கூட்டத்துக்கு, ஆட்களைத் திரட்டி வந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துவிட்டார். இப்படியொரு பின்னடைவை ஓ.பி.எஸ் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. 'இது அறுவடைக் காலம். இதைத் தவறவிட்டுவிட்டால், வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது' என ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் பேசி வருகின்றனர் எடப்பாடி தரப்பினர்.

கொங்கு மண்டலத்துக்கு ஜெயலலிதா வரும்போதெல்லாம் ஜமாப் கலைக்குழுவைக் கூட்டி அசத்துவது ஆறுக்குட்டியின் வழக்கம். அந்தக் குழுவினரோடு இணைந்து இவரும் ஆடுவார். கட்சித் தலைமையைக் கவர்வதற்காக அவர் ஆடிய ஆட்டத்தால், ஆறாம் வகுப்பு படித்தவருக்கு 
எம்.எல்.ஏ பதவி தேடி வந்தது. கொங்கு மண்டலத்தின் பிரதான அமைச்சரோடு, பல எம்.எல்.ஏக்கள் வர்த்தக தொடர்பு வைத்திருந்தாலும் ஆறுக்குட்டி அந்த அமைச்சர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

ஓபிஎஸ் விசுவாசி
ஓ.கே.சின்னராஜ், அருண்குமார் போன்றோர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னரே, தன்னுடைய ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் ஆறுக்குட்டி. இதற்குப் பிரதான காரணம், பொதுப் பணித்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது, மண் வியாபாரத்தில் அவருடன் ரொம்பவே நெருங்கிப் பழகியிருந்தார் ஆறுக்குட்டி. அந்தப் பாசத்துக்காக எடப்பாடி பக்கம் தாவாமல், பன்னீர்செல்வம் அணிக்கு விசுவாசத்தைக் காட்டினார். நேற்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் ஓபிஎஸ்
ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் ஓபிஎஸ்
நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் இருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ். இந்த விலகலை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நேற்று காஞ்சியில் நடந்த பொதுக் கூட்டத்திலும், 'பணத்துக்கு விலை போகிறவர்கள் அங்கே இருக்கிறார்கள். நாம் பாசத்துக்கு விலை போனவர்கள். உண்மையான அ.தி.மு.க யார் என்பது மக்களுக்குத் தெரியும்' எனப் பேசினார் பன்னீர்செல்வம்.

கொங்கு லாபியின் ஆதங்கம்
கொங்கு லாபியின் ஆதங்கம் 
 ஆறுக்குட்டியை வளைத்தது குறித்து, கொங்கு அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். " கோவை மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலரும் வேலுமணியின் ஆதரவில் பதவிக்கு வந்தவர்கள்தான். ஏதோ ஒரு வகையில் அமைச்சருடன் வர்த்தகரீதியான தொடர்பையும் வைத்திருக்கிறார்கள். வடக்குத் தொகுதி அருண்குமார் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ் ஒக்கலிக கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும், கவுண்டர் சமூக லாபிக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள். இவர்கள் ஓ.பி.எஸ் பக்கம் இருப்பதைக்கூட கொங்கு லாபி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆறுக்குட்டி, ஓ.பி.எஸ் அணியில் இருப்பதை உறுத்தலாக கவனித்து வந்தனர். இது சரிதானா? என ஆறுக்குட்டியிடம் பேசியபோது,
 
ஒரே நிமிடத்தில் 50 கெட்ட வார்த்தைகள்! 'ஒரே நிமிடத்தில் 50 கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டினார்' என எடப்பாடி ஆதரவாளர்கள் வேதனைப்பட்டனர். ஒருகட்டத்தில், சமூகத்துப் பெரியவர்கள் மூலமாகவும் பேச வைத்தனர். ' எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கிடைக்காத ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. நம் ஆளைக் கவிழ்க்க எதிர் அணிக்கு நீ போகலாமா? இது நீடித்தால், சமூகத்தில் இருந்தே ஒதுக்கி வைத்துவிடுவோம்' என்றெல்லாம் பேசியுள்ளனர். இதற்கும் ஆறுக்குட்டி பதில் சொல்லாமல் மௌனம் காத்தார். இறுதியாக, அவரை வளைப்பதற்குக் கிடைத்த வாய்ப்புதான் கொடநாடு விவகாரம்" என விவரித்தவர்,
கனகராஜ் ஆடியோ டேப்
கனகராஜ் ஆடியோ டேப் "கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய டிரைவர் கனகராஜை ஆறுக்குட்டிக்கு நன்றாகத் தெரியும். அவர் கனகராஜுடன் பேசிய ஆடியோ தகவல்களும் வெளியானது. ' இந்த விவகாரத்தில் உன்னை சிக்க வைப்பது எளிது' என ஆளும்தரப்பில் இருந்து தகவல்கள் செல்லவே, எந்தப் பதிலையும் பேசாமல் எடப்பாடி பக்கம் வந்துவிட்டார். கூடவே, ஆறுக்குட்டியிடம் பேசிய கொங்கு அமைச்சர் ஒருவர், ' அறுவடைக் காலத்தில் அமைதியாக இருந்துவிட்டால், வேறு எப்போதும் சம்பாதிக்க முடியாது. எங்கள் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று பாருங்கள்' எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன் பிறகே மனம் மாறினார் ஆறுக்குட்டி" என்றனர் விரிவாக. 'இது மட்டும் காரணமல்ல...கவுண்டம்பாளையம் தொகுதிக்குள் எந்த ஒரு திட்டத்தையும் தொடங்க விடாமல் ஒரே அடியாகப் புறக்கணித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதன் விளைவாகத்தான் தொகுதிப் பிரச்னையைக் காரணம் காட்டி, ஆளும்கட்சி பக்கம் வந்தார் ஆறுக்குட்டி' எனவும் சொல்கின்றனர் கோவை அ.தி.மு.கவினர்.
யாருக்கு என்ன தேவை..!
யாருக்கு என்ன தேவை..! 
 
ஓ.பி.எஸ் அணியின் பலத்தைக் குறைப்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. 'யாருக்கு என்ன தேவை? பலவீனம் என்ன? குடும்ப சூழல் என்ன?' என்பன போன்ற தகவல்களை உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் ஒரு சிலரைத் தவிர அனைவரையும் வளைக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது கொங்கு டீம். எடப்பாடியை அனுசரித்துப் போனால், என்னென்ன வசதிகள் வந்து சேரும் என்பதை எதிர் முகாமுக்குத் தெரியப்படுத்தி வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களாக எந்தவித வருமானமும் இன்றி, ஓ.பி.எஸ் அணியினர் புலம்பி வருகின்றனர். ' தர்மயுத்தத்தை அண்ணன் எப்போது நிறுத்துவார்?' எனப் புலம்பி வருகின்றனர்.
புலம்பலில் ஓ.பி.எஸ். தரப்பு
புலம்பலில் ஓ.பி.எஸ். 
 
தரப்பு இரண்டு அணிகளும் இணையும்...அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அதற்கான அறிகுறிகள் தென்படாததால், எடப்பாடி முகாமுக்குத் தூது அனுப்பி வருகின்றனர். இதில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களுக்கு, ' எந்த அணியில் அதிக லாபம் கிடைக்கும்?' என்ற எண்ணம்தான் அதிகம் உள்ளது. ஆனால், எடப்பாடியோ, ' தேர்தல் ஆணையத்தில் சசிகலா பதவி செல்லாது என அறிவித்தால், அதிகாரத்தின் துணையோடு கட்சியின் தலைமைப் பதவிக்கு வரலாம்' எனக் கணக்குப் போடுகிறார். ' இந்தக் கணக்குகளை உடைக்கும் வேலையில் தினகரன், ஓ.பி.எஸ் தரப்பினர் இறங்கினாலும், டெல்லியின் ஆசிர்வாதத்தால் திட்டமிட்டு செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் கொங்கு அணியினர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.