Latest News

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தலித் அடையாளம் என்பது மலிவான அரசியலின் உச்சம்!

 Paa Krishnan's article on Presidential Election
ஒரு வழியாக குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. இதில் யாராவது ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தலித் ஒருவரைக் குடியரசுத் தலைவராக்கினோம் என்று ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ மார்தட்டிக் கொள்ளலாம். இதுவரை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் இப்படி பட்டவர்த்தனமாக தலித்துக்கு நாங்கள்தான் காவலர்கள் என்று கூறிக் கொள்ளும் வகையில் அரசியல் நடத்துவது அருவருப்பின் உச்சியாகவே தோன்றுகிறது. தலித் ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல.

ஏற்கெனவே, கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆனால், அப்போதைய முறைக்கும் இப்போது நடைபெறும் தேர்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கேஆர் நாராயணன், ராஜீவ் காந்தி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். சங்கர்தயாள் சர்மா குடியரசுத் தலைவராக இருந்தபோது குடியரசுத் துணைத் தலைவராக இருந்தவர். ஆனால், அவரைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடச் செய்தபோது, தலித் என்ற அடையாளத்தைச் சொல்லி, அப்போதைய ஆளும் ஐக்கிய முன்னணி அரசியல் நடத்தவில்லை. இந்தியா குடியரசு நாடான பிறகு, கல்வியாளர்கள், தொழிற்சங்கவாதிகள், பழுத்த அரசியல்வாதிகள், தேசியவாதிகள் போன்றோர் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர். முதன் முதலில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரைக் குடியரசுத் தலைவராக நிறுத்தி வெற்றி பெறச் செய்யும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தது அன்றைய பிரதமர் இந்திரா காந்திதான். 1980ம் ஆண்டுகளில் காலிஸ்தான் பிரச்சினையைத் தணிக்க ஓர் உபாயமாக இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கியானி ஜைல்சிங்கை (உண்மையில் ஞானி ஜைல்சிங் என்பதே சரி) ஆளும் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறச் செய்தார். ஜைல்சிங் அடிப்படையில் தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர். கறைபடாத கரம் கொண்டவர். அனைத்துத் தரப்பினரின் அன்பையும் பெற்றவர். இந்திரா காந்தியை அரசியல் ரீதியில் எதிர்த்த மொரார்ஜி தேசாய் ஜைல்சிங்கைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரைத் தனது கைப்பாவையாக்கும் நோக்கத்திலும், கொதித்துக் கொண்டிருந்த சீக்கியர்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் ஜைல்சிங்கைக் குடியரசுத் தலைவராக்கினார் இந்திரா காந்தி. நாட்டின் அரசமைப்புச் சட்டத்திலேயே மிக உயர்ந்த பொறுப்புக்கு இப்படி மதச்சாயம் பூசியது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மலிவான அரசியல். இத்தனைக்கும் குடியரசுத் தலைவர் பதவிக்குரிய தகுதிகள் கொண்டவர் ஜைல்சிங். மொரார்ஜி தேசாய் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பிரதமரான சௌத்ரி சரண் சிங்கும் ஆட்சியை இழந்தபோது, ஜனதா கட்சி பாபு ஜெகஜீவன் ராமைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. ஆனால், அப்போது, தலித் தலைவரை நிறுத்துவதாக ஜனதா கட்சி பிரகடனம் செய்யவில்லை. ஜெகஜீவன் ராம் எமர்ஜென்சியை எதிர்த்த ஜனநாயகவாதி. மிக மூத்த அரசியல் தலைவர், நல்ல நிர்வாகி என்ற அடிப்படையில்தான் பிரதமர் வேட்பாளராக ஜனதா கட்சி அறிவித்தது. ஆனால், ஜனதா வெற்றிபெறாததால் ஜெகஜீவன் ராம் பிரதமர் ஆகும் வாய்ப்பைப் பெறவில்லை. வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, 2002ம் ஆண்டுத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முதலில் நினைத்தது பி.சி. அலெக்சாந்தரைத்தான். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவரது தனிச் செயலராக இருந்தவர், ஆளுநர் பொறுப்புகளை வகித்தவர். இருந்தபோதும், தான் மதச்சார்பற்ற கட்சி என்பதைக் காட்டிக் கொள்ளவே பாஜக அலெக்சாந்தரைக் குடியரசுத் தலைவராக்கத் திட்டமிட்டிருந்தது. இருந்தாலும், அவருக்குப் போதிய ஆதரவு கிடைக்காது என்ற சந்தேகம் ஏற்பட்டதால், கடைசி நேரத்தில் பிரதமரின் அறிவியல் ஆலோசகரான அப்துல் கலாம் பெயர் அறிவிக்கப்பட்டது.

அவரை காங்கிரஸும் ஆதரித்தது. குடியரசுத் தலைவரானார். குறிப்பிட்ட இனம், சாதி, சமுதாயம், சமயம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களைத் திருப்திப்படுத்தவோ, அவர்களது பாதுகாவலன் தானே என்று பிரகடனம் செய்யவோ இதுபோல் வேட்பாளர்களை நிறுத்துவது மலிவான அரசியல். மாறாக, குறிப்பிட்ட மொழி, இன, சாதி, சமுதாயம், சமயத்தினரின் தேவைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவது, அவர்கள் மீதான கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது, அவர்களது அச்சத்தைப் போக்குவதுதான் சரியான செயலாக அமையும். தலித்தைக் குடியரசுத் தலைவராக்கும் நடவடிக்கையை விட ஆணவக் கொலைகளை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். தீண்டாமை என்ற கொடுமையை அழித்தாக வேண்டும். இன்றும் பல பகுதிகளில் நீடிக்கும் இரட்டைக் குவளை முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பாஜக பிரமுகர் எடியூரப்பா தலித் வீட்டில் உணவு உண்ணத் தயங்கியதாக செய்தி வந்துள்ளது. இப்படிக் கண்டிக்கப்பட வேண்டிய பல நிகழ்வுகளையைக் களையாமல் தலித்தைக் குடியரசுத் தலைவராக்குவது பாஜக கூட்டணிக்கு முரணாகவே அமையும். காங்கிரஸ் ஆட்சியிலும் தலித் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் துடைத்தெறியாமல் தலித்தைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடச் செய்வது போட்டி வெற்று அரசியலாகத்தான் அமையும். இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே மிக உயர்ந்த பீடம் குடியரசுத் தலைவர் பதவி. அதில் குறிப்பிட்ட சாயம் பூசப்பட்டவர் அவரே விரும்பாத நிலையில், நியமிக்கப்படுவது ஆரோக்கியமானதா என்பதை சிந்திக்க வேண்டும். சமூகத்தில் சாதி, சமய, இன, மொழி, பாலின வேறுபாடுகள் முற்றிலுமாகத் தகர்த்தெறியப்பட்டால்தான் உயர் பதவியில் அத்தகைய பாதிக்கப்பட்ட பிரிவினர் பொறுப்பேற்பதில் அர்த்தம் இருக்கும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.