Latest News

திப்பு சுல்தானின் ஏவுகணைக் குவியல் வேட்டையாடத் துடிக்கும் “நாசா”!

மைசூர் புலி திப்பு சுல்தான் அவருடைய தந்தை ஹைதர் அலி இருவரின் உருவச் சிலை அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் வாசலில் இடது வலதாக இருபுறமும் வைக்கப்பட்டு அந்த சிலைகளுக்கு கீழ் அவரவர்களின் பெயர் பொறிக்கப்பட்டு உலகின் முதல் ஏவுகணை ஏவியவர்கள் என்று விளக்கம் இருக்கும் அமெரிக்காவுக்கு பயணம் போகும் பலரும் நாசா விண்வெளி மைய வாசலில் இதைக் காணலாம். நாசா வரவேற்பு அரங்கிற்குள் பிரம்மாண்டமான நம் ஊர் நடராஜர் சிலையும் உண்டு. அதற்கு கீழ் காஸ்மிக் டான்ஸ் என்ற விளக்கம் இருக்கும். தற்பொழுது தென்னக ரயில்வே சென்னையிலிருந்து திப்பு சுல்தான் ஆட்சி புரிந்த மைசூருக்கு வேகமான தொடர்
வண்டியை இயக்க திட்டமிட்டது. சீரங்கப்பட்டினம் கோட்டை சுவர்களை உள்ளடக்கிய இந்த திட்டப் பகுதி ரயில்பாதையை ஒப்புதலுக்காக இந்திய பாதுகாப்புத் துறை வசம் ஒப்படைத்தது தென்னக ரயில்வே.
ஏனெனில் திப்பு சுல்தான் ஆட்சி இல்லை என்றாலும் இடிந்த அந்த கோட்டையைச் சுற்றி போகும் காவிரி ஆறு அதன் அருகாமை இடங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறை கண்காணிப்பில் உள்ளது. தொல் பொருள் ஆய்வுத்துறை அந்த இடங்களை பராமரித்து வருகிறது.
பல ஆண்டுகளுக்கும் முன்பு சென்னையில் பிரிட்டிஷாரை நேருக்கு நேராக எதிர் கொண்டார் ஹைதர் அலி. தற்பொழுது சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் அருகே வீரர்கள் அணிவகுத்து நிற்க பிரிட்டிஷாருடன் திடீரென்று சில ஃபிரெஞ்ச் வீரர்கள் இணைந்து நிற்பதைக் கண்டார். அந்தப் போரில் சென்னையை முற்றுகையிட தன் மகனுக்கு உத்தரவிட்டார்.
வழக்கமாக இந்திய சிற்றரசர்கள் போர்க்களத்தில் முன் வரிசையில் ஈட்டிகளைத் தாங்கிய வீரர்தொகுப்பை வரிசையில் நிற்க வைப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வாள் ஏந்திய வீரர்கள் மூன்றாம் வரிசையில் குதிரைப் படை வீரர்களை நிறுத்துவார்கள் என்று நினைத்திருந்தனர் வெள்ளை போர்ப்படைத் தளபதிகள். அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் திப்பு சுல்தான் ஒட்டு மொத்த படை வீரர்களை மந்தைவெளி அடையாறு ஆற்றங்கரையில் தங்க வைத்தார். மாறாக தன்னுடன் புதிதாக படைத் தொகுப்பில் சேர்க்கப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய வீரர்களை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு போர்க்களம் நோக்கி நகர்ந்தார்.
திடீரென்று திப்பு சுல்தான் படை வீரர் கூட்டம் மூன்றடி நீளம் உள்ள குழல் போன்ற ஏவுகணை மூலம் தாக்குதலைத் தொடுத்தனர். அது தீயை கக்கிக் கொண்டு பெரும் சப்தத்துடன் அந்த பிராந்தியமே அதிரும்படி வெடித்துச் சிதறியது. இதனால் பிரிட்டிஷ் மற்றும் ஃபிரெஞ்ச் வீரர்கள் செய்வதறியாது திகைத்து நாலாபுறமும் சிதறி ஓடினர். தீக்காயத்தின் எரிச்சல் தாங்காமல் பலர் கடலில் மூழ்கினர். இதைக் கண்டு பிரிட்டிஷ் படை நிலை குலைந்தது. மீண்டும் சிதறி ஓடிய வீரர்கள் ஒன்று சேர்ந்தனர். ஏனெனில் புறமுதுகு காட்டி ஓடுபவர்களைச் சுடச் சொல்லி பிரிட்டிஷ் தளபதிகள் ஆணையிட்டதால் அதற்கஞ்சி மீண்டும் ஒன்று சேர்ந்தவர்களை திப்பு சுல்தான் வீரர்கள் இரண்டாம் ஏவுகணையை வீசி திணறடித்தனர்.
போர்க்களத்தில் புதுமையான திப்பு சுல்தானின் ஏவுகணை ஆயுதங்கள் ஏகாதிபத்திய தளபதிகளை மிரள வைத்தது. அது என்னவென்று தெரியாமல் தொடர்ந்து போரில் ஈடுபட விரும்பாமல் பிரிட்டிஷ் துருப்புகள் பின்வாங்கின. பின் வாங்கியவர்களை மீண்டும் மிரட்டுவதற்காக திப்பு சுல்தான் மூன்றாவது ஏவுகணையை வீச உத்தரவிட்டார். வேகமாக பறந்தோடிய ஏவுகணை வெடிக்காமல் இன்று காந்தி சிலை உள்ள இடத்தில் தொப்பென்று விழுந்தது. இதை அங்கிருந்த ஃபிரெஞ்ச் வீரர்கள் கனத்த போர்வையில் சுற்றி தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். இந்த ஏவுகணை ஆய்வுக்காக பாரிஸ் கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்த நெப்போலியன் திப்பு சுல்தான் மீது மரியாதை கொண்டார். அன்று தொடங்கி திப்பு இறக்கும் வரை நெப்போலியனுடன் கடிதத் தொடர்பும், தூதர்கள் வழியே தகவல் பரிமாற்றமும் செய்தபடி இருந்தார்.
இது போன்ற ஏராளமான ஏவுகணைகள் திப்பு சுல்தானின் ஆயுதக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இறுதி யுத்தத்தின் போது அங்கிருந்து பெருமளவு ஆயுதங்கள் கையாளப்படவில்லை. கோட்டைக்குள் இருந்த வீரர்களின் கைவசத்தில் இருந்த ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால் திப்பு வீழ்ந்தார். ஒரு வேளை முன் யோசனையோடு அவருடைய ஏவுகணை ஆயுதங்கள் அந்தப் போரில் பயன்படுத்தப்பட்டிருந்தால் திப்பு நிலைத்திருப்பார் போலும்!?
தற்போது இந்த திப்புவின் ஆயுதக் கிடங்கை ஆய்வு செய்ய அங்குள்ள மிச்சமீதி ஏவுகணைகளைப் பற்றி அறிந்து கொள்ள அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையம் இந்திய பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி செயற்கை கோள்களை ஏவி உளவு அறிய தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்திய பாதுகாப்புத் துறை இரயில்வே பாதைக்காக திப்பு சுல்தானின் ஆயுதக் கிடங்கை தற்போதுள்ள இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு இடம் மாற்றி அங்கு திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்காட்சி அமைக்க முடிவு செய்து அந்த கிடங்கை துப்புரவு செய்தது. அதன் இடிபாடுகளை ஒரு மலைபோல் மைசூருக்குப் போகும் பாதை இருமருங்கிலும் கொட்டி வைத்துள்ளது.
அமெரிக்க நாசா திப்பு சுல்தானின் ஏவுகணைகளைப் பற்றி ஆய்வு செய்கிறது என்கிற தகவல் இந்திய பாதுகாப்புத் துறையினரிடையே அதிர்ச்சியை உருவாக்கியது. திருவனந்தபுரம் பாதுகாப்பு உளவுப் பிரிவுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறை பழமையான கோயில்களில் காணப்படும் கோபுரங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இப்படிப்பட்ட ஆய்வில் இனம் தெரியாத ஒளி அலைகள் ஒரு கோபுரத்தில் பதிவானதை கண்டறிகிறது. அது குறித்து மேலும் ஆய்ந்த போது இனம் தெரியாத செயற்கைக் கோள் இந்தியப் பகுதியில் ஆய்வு நோக்கில் இரண்டு முறை வந்திருப்பதை அந்தப் பதிவு உறுதி செய்தது. சுதாரித்த பாதுகாப்பு உளவுத் துறை துருவி ஆராய்ந்ததில் நாசாவின் கை வண்ணம் என்பதை அறிந்து மௌனமாகினர். மொத்தத்தில் உலகின் முதல் ஏவுகணை பயன்படுத்திய திப்பு சுல்தானின் தொழில்நுட்பம் குறித்த ஆவலும் தேடலும் உலக அளவிலான பாதுகாப்புத் துறை வல்லுனர்களிடம் மிகுந்து காணப்படுகிறது.
திப்பு சுல்தான் இன்றளவும் கன்னட மக்களிடம் மரியாதைக்கு உரியவராக போற்றப்படுகிறார். மறைந்தாலும் அவருடைய வீரத்தை சீரங்கப்பட்டின காவிரி ஆற்றங்கரை கோட்டைச் சுவர்கள் பறை சாற்றி வருகின்றன. திப்பு சுல்தான் வீழ்த்தப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.