Latest News

சசிகலா முதல்வராக.. ஓபிஎஸ்க்கு எதிராக 3 அமைச்சர்கள் ஒத்துழையாமை இயக்கம்?- புது பஞ்சாயத்து!


கங்கா சந்திரமுகி அறைக்கு போனா.... சந்திரமுகியா நின்னா... நடந்தா... இப்போ முழுசா சந்திரமுகியா மாறிட்டா... புரிஞ்சவன் பிஸ்தா... இதுதான் இப்போது வாட்ஸ் அப்பில் வைரல் ஆகிறது. போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர்ந்த வி.கே. சசிகலா, அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர விரும்பினார். அது மட்டும் போதுமா? தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் நன்றாக இருக்குமே என்று யார் சொன்னார்களோ இப்போது ஓபிஎஸ்க்கு எதிராக சில அமைச்சர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 5ஆம் தேதி காலமானார். இதையடுத்து புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

இதற்கிடையில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, கட்சி பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கட்சியின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் இதை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் இதை ஏற்க மறுத்து வருகின்றனர்.

முதல்வர் சின்னம்மா நெல்லையில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், சின்ன அம்மா சசிகலா முதல்வராக வரவேண்டும் என ஜெயலலிதா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா பேரவையின் 50 மாவட்ட செயலாளர்களும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். மேலும் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மொட்டை அடித்து ஒட்டு மொத்தமாக தீர்மானத்தை நிறைவேற்றுவோம். மேலும் அந்த தீர்மான நகலோடு சசிகலாவை சந்தித்து அவர் முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்று கூறினார் உதயகுமார்.

சின்னம்மா கரத்தை வலுப்படுத்துவோம் ஜெயலலிதா பேரவை சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அதிமுகவை உடைக்க எதிர்க்கட்சிகளும் மற்றும் சிலரும் சதிவலை பின்ன பார்க்கின்றனர். கழகத்தை காப்பாற்றவும் கட்சியை வழிநடத்தவும் சரியான இந்த தருணத்தில் நாம் உறுதுணையாக ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒன்னரை கோடி கட்சி தொண்டர்களை காப்பாற்றவும் தமிழக மக்களை காப்பாற்றவும் சின்னம்மாவால் தான் முடியும். 33 ஆண்டுகளுக்கு மேலாக அம்மாவுடன் பாசமும் நட்பும் கொண்ட சின்னம்மா ஒருவரால் தான் கட்சியை வழிநடத்தவும் முடியும் ஆகவே கட்சியை உத்வேகத்துடன் செயல் பட சின்னம்மா கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் எனவும் நாம் அனைவரும் அவரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

நம்பிக்கை சின்னம் அம்மாவுக்கு எத்தனை சோதனைகள் வந்த போதும் உற்ற துணையாக பாதுகாவலாராக இருந்து துன்பங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு உயிர் காக்கும் தாயாகவும், தோழியாகவும், உறுதுணையாக நின்று 33 ஆண்டு காலம் அம்மா அவர்களோடு சுக துக்கங்ககளில் பங்கேற்று அவரது மறைவுக்கு பிறகு வெற்றிடம் உருவாகும் வகையில் அம்மாவின் கழகத்தையும் கட்சி தொண்டர்களையும் காத்து நம் அனைவரின் பாசத்திற்குரிய ஒரே நம்பிக்கை சின்னமாக திகழும் சின்னம்மா தான் கழகத்தின் அடுத்த பொதுச்செயலாளராக வரவேண்டும் எனவும் கழகத்தை ராணுவ கட்டுக்கோப்புடன் அம்மா, வழிநடத்தி விட்டு சென்ற பணிகளை இனி சின்னம்மா தான் வழிநடத்த வேண்டும் என கேட்டு கொள்கிறது.

ஆர்.கே.நகரில் போட்டி இதனிடையே ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர்.இராமச்சந்திரன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் இன்று காலை அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா போட்டியிட்டு அதிமுகவை தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று கூறினார். அதிமுகவுக்கு சசிகலா தலைமேற்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும், மக்கள் சேவையில் அனுபவம் பெற்ற சசிகலா அரசியல் சேவையும் ஆற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அதிமுகவுக்கு தலைமையேற்கும் வரை சசிகலாவிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக சசிகலா வர வேண்டும் என்றும் கூறினார்.

ஒபிஎஸ்க்கு ஒத்துழையாமை சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஓபிஎஸ்க்கு ஒத்துழைக்காமல் இருக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அம்மாவின் கட்சிக்கும், அம்மா வழி நடத்திய அரசுக்கும் தலைமை நடத்த வேண்டும் என்கிறார் ஆர்.பி உதயகுமார். வட சென்னையில் தொடங்கி கன்னியாகுமாரி வரை நடத்திய கூட்டத்தில் ஒட்டு மொத்தமாக இந்த தீர்மானம் போடப்பட்டுள்ளதாகவும், இதற்காகவே ஜெயலலிதா பேரவை போட்ட தீர்மானத்தை ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைத்து ஆசி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொதிப்பு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் முன்வைத்துள்ள சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர்கள் சேவூர்.இராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் வழிமொழிகின்றனர். அதே நேரத்தில் தென்மாவட்ட தேவர் சமூகத்தினர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்தான் அதிமுகவின் பொதுச்செயலராகவும் வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவியையே பறிக்கவும் முயற்சிகள் நடப்பதால் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

புது பஞ்சாயத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அக்கட்சித் தொண்டர்கள் விரும்பாவிட்டாலும் நிர்வாகிகள் தேர்வு செய்து விடுவார்கள். ஆனால் ஆர். கே.நகரில் போட்டியிட்டு சசிகலா வெற்றி பெறுவாரா? முதல்வர் நாற்காலியில் அமர்வாரா என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். முதல்வர் நாற்காலி பதவி எப்போது வேண்டுமானலும் பறிபோகும் என்றுதானோ என்னவோ? அந்த அறைக்குள் செல்லாமலேயே இருக்கிறார் ஓபிஎஸ் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.