Latest News

ஸ்டாலின்- கருணாநிதி மோதலும், குளிர் காயும் அதிமுகவும்!


திமுக தலைவர் மு.கருணாநிதிக்கும், அவருடைய மகனும், கட்சியின் பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதலில் நன்றாக குளிர்காயத் துவங்கி விட்டது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு. ஜூன் 17 ம் தேதி தமிழ் நாட்டின் நிதியமைச்சரும், சட்டமன்ற அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள மூன்று பக்க அறிக்கை இதனை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த அறிக்கை 17 ம் தேதி மதியம் மு.க. ஸ்டாலின் தமிழக சபாநாயகருக்கு எதிராக தெரிவித்த சில கருத்துக்களுக்கு பதில் கூறுவதாக அமைந்திருக்கிறது. ஆனால் அதனை விட முக்கியமானது, இந்த அறிக்கை சபாநாயகரின் செயல்களுக்கு சப்பை கட்டு கட்டுவதை விடவும், திமுக தலைவரின் குடும்பத்தில் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான மோதலை ஊதி, ஊதி பெரிதாக்குவதே நோக்கங் கொண்டதாகவே உள்ளது.

ஜூன் 17 ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுங் கட்சிக்கு பெருந்தன்மை இல்லை என்று சாடினார். அதாவது, திமுக தலைவர் கருணாநிதியின் வீல் சேர் வந்து போகும் விதத்தில் சட்டமன்றத்தில் இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறினார். இதனைச் சுட்டிகாட்டியுள்ள ஓபிஎஸ் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற போது இருக்கை எண் 207 க்கு முன் பக்கத்தில் எப்படி கருணாநிதியின் வீல் சேர் வந்து நின்று அவர் உறுதி மொழி எடுத்துக் கொண்டாரோ அப்படியே அதே இடத்திலிருந்து கொண்டே அவரால் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு அடுத்து ஓபிஎஸ் கூறும் வார்த்தைகள் தான் முக்கியமானவை.... "இந்தப் பிரச்சனை கருணாநிதி சட்டப்பேரவை விவாதங்களில் பங்கேற்பது பற்றியல்ல. இது உண்மையிலேயே தந்தைக்கும், தனயனுக்கும் உள்ள பிரச்சனைதான். திமுக என்றாலே கருணாநிதிதான்... கருணாநிதிதானே கட்சியின் தலைவர்... அப்படியிருக்கும் போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி கருணாநிதிக்குத் தானே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தங்களுக்குள்ள பிரச்சனையில், உட் கட்சிப் பிரச்சனையில் ஸ்டாலின் தன்னை எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கச் செய்து விட்டார் ...அப்படியென்றால் கருணாநிதியின் நிலை என்ன? வெறும் சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்துதான் கருணாநிதிக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் கருணாநிதி சட்டமன்றத்திற்கு வந்து விவாதங்களில் பங்கேற்க மாட்டார் என்பதால் அந்தப் பழி தன் மீது வந்து விடக் கூடாதென்பதற்காக, பிரச்சனையை திசை திருப்பும் விதமாக கருணாநிதிக்கு சரியான இருக்கை ஒதுக்கப் படவில்லை என்று ஸ்டாலின் குற்றஞ் சாட்டியுள்ளார்.

மேலும் திமுக எம்எல்ஏ க்கள் கூட்டத்தை கருணாநிதி புறக்கணித்ததை ஊடகங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றன. கருணாநிதியை ஒளரங்கசீப்புடன் ஒப்பிட்டு முகநூலில் திமுக வினர் கருத்து தெரிவித்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ள ஓபிஎஸ், தற்போது கருணாநிதியின் எதிர்கட்சித் தலைவர் பதவியை தான் தட்டிப் பறித்ததை ஸ்டாலின் மறைக்க நினைத்தால் அவர் ஏமாந்து தான் போவார்,'' என்றும் கூறியிருக்கிறார். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒரு மாதம் நிறைவடைய இருக்கும் நிலைமையில் ஆளும் அதிமுக சூட்சுமான அரசியல் செய்ய துவங்கியிருப்பது ஓபிஎஸ் அறிக்கை மூலம் தெளிவாகிறது. முதன் முறையாக கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான மோதலை அதிமுக அதிகாரபூர்வமான முறையில் பேசத் துவங்கியிருக்கிறது. கடந்த காலங்களில் அரசல், புரசலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆளும் தரப்பு இதனை பேசிக் கொண்டிருந்தது. தற்போது வெளிப்படையாகவே பேசத் துவங்கி விட்டது. அதுவும் மாநில நிதியமைச்சரின் அறிக்கை வாயிலாக, அதாவது தமிழக அரசின் செய்தித் துறை வெளியிட்டிருக்கும், அதிகாரபூர்வமான அரசின் அறிக்கையாக இந்த பதிலடி திமுக வுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. வழக்கமாக கடந்த காலங்களில் ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகிய இருவர் விஷயங்களிலும், முதலமைச்சர் ஜெயலலிதா வின் அணுகுமுறை இரண்டு விதமாக இருக்கும். ஸ்டாலினுடன் சற்றே அரசியில் ரீதியிலான மென்மையான அணுகுமுறையைத்தான் ஜெ கடைபிடித்து வந்தார். 2004 ம் ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக திமுக தலைவர் தனிப்பட்ட முறையில் கொடுத்த 21 லட்சம் ரூபாயை ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுத்தார். திமுக கொடுத்த 1 கோடி ரூபாய் நேரிடியாக அப்போது பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது
அதன் பிறகும் சில சமயங்களில் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் ஸ்டாலினுக்கு ஜெயலலிதா வணக்கம் தெரிவிப்பது போன்ற சம்பிரதாயங்கள் பெரிது படுத்திப் பேசப்பட்டதுண்டு. ஆனால் கருணாநிதியை பொறுத்த வரையில் அவரை நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் ஜெயலலிதா அதனை தவிர்த்தே வந்திருக்கிறார். சமீபத்தில் எம்எல்ஏ வாக கருணாநிதி பதவியேற்க சட்டமன்றம் வந்த போது அதுவரையில் சபையில் இருந்த ஜெயலலிதா கருணாநிதி அவைக்குள் நுழைந்ததும் எழுந்து வெளியே சென்று விட்டார். இதனை விமர்சித்து கருணாநிதியே அறிக்கை விட்டதும் இங்கு குறிப்பிடத் தக்கது. ஆகவே இந்த பின்னணியில் கருணாநிதிக்கும், 
ஸ்டாலினுக்கும் இடையிலான பிரச்சனைகளில் இதுவரையில் சற்றே ஸ்டாலின் தரப்பிடம் மென்மையான அணுகுமுறையை கையாண்டு வந்த ஆளும் தரப்பு தற்போது முதன் முறையாக கருணாநிதியை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதிமுக வின் இந்த திடீர் கருணாநிதி பாசம் சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுதான். எந்த விஷயத்திலும் கருணாநிதியின் கருத்தை ஆதரிக்காத அதிமுக இன்று முதன் முறையாக ‘திமுக என்றாலே கருணாநிதிதான் ... கருணாநிதிதானே கட்சியின் தலைவர். அப்படியிருக்கும் போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி கருணாநிதிக்குத் தானே கிடைத்திருக்க வேண்டும்,'' என்றே திமுக தலைவருக்கு வெண் சாமரம் வீசத் துவங்கியிருப்பது அப்பா வுக்கும் மகனுக்குமான சண்டையில் குளிர் காயும் வேலை என்றுதான் பார்க்கப் படுகிறது. இதனை ஏற்கனவே அதாவது ஜெ பதவியேற்பின் போதே அதிமுக தொடங்கி விட்டதாக திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார். "ஸ்டாலினுக்கு ஜெ பதவியேற்பு விழாவில் இடம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் கொடுத்த அறிக்கையிலிருந்தே இது தொடங்கி விட்டது. ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் ... 'putting cat among the pigeons' அதாவது புறாக்களுக்கு மத்தியில் பூனையை விடுவது என்பது வார்த்தைகளுக்கான அர்த்தம். இதன் உண்மையான பொருள் ஒரு செயலின் மூலம் பலரிடமும் குறிப்பாக தங்களுடைய எதிரிகள் மத்தியில் குழப்பத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவது, இதனைத்தான் ஆளும் அதிமுக தற்போது செய்யத் துவங்கியிருக்கிறது,'' என்கிறார் திமுக வின் மூத்த நிர்வாகி ஒருவர்.

"ஆனால் இதற்கு முழுக்க, முழுக்க காரணம் தற்போது திமுக வுக்குள் அப்பாவுக்கும், மகனுக்கும் நடக்கும் மோதல்தான் ... இதனை ஜெயலலிதா நன்றாக பயன்படுத்திக் கொள்ளத் துவங்கி விட்டார்,'' என்று அவர் மேலும் கூறுகிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் திமுக வுக்குள் நடக்கும் விஷயங்கள், குறிப்பாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி ஸ்டாலினுக்கு போய்ச் சேர்ந்த விதம் ஆகியவை அரசியல் வட்டாரங்களில் பேசுபடு 
பொருளாகத்தான் இருந்து வந்தன. தற்போது ஸ்டாலினின் பேட்டி மற்றும் அதற்கான ஓபிஎஸ் ஸின் எதிர் வினை போன்றவை கருணாநிதி - ஸ்டாலின் மோதலை ஊடகங்களின் முக்கிய விவாதப் பொருளாக்கப் போகிறது. கடந்த காலங்களில் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான சண்டையில் சற்றே மகனுக்கு ஆதரவாக இருந்த ஆளுந்தரப்பு தற்போது தன் 

நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் தற்போது ஸ்டாலினின் கை திமுக வில் ஓங்கியிருப்பதுதான். ஓங்கிய கைகளை உடைப்பதுதான் எந்தவோர் ஆளுங் கட்சிக்கும் பிரதான இலக்கு என்பதால் இந் நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருக்கிறது. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது... வரும் நாட்களில் சட்டமன்றத்தில் இந்த விவகாரம் வெடிக்கும். கருணாநிதிக்கு போதிய இட வசதி செய்து தராத விஷயத்தை திமுக எழுப்பும், இதற்கு பதிலடியாக கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான மோதலை ஆளுந் தரப்பு கிளப்பும். பிரச்சனை திமுக வின் உட்கட்சி விவகாரங்களை பற்றித் திரும்பும். அப்போது எழும் களேபரத்தில் எதிர்கட்சிகள் சபையிலிருந்து வெளியேறலாம்... அல்லது வெளியேற்றப் படலாம். இதில் ஏதாவது ஒன்றுதான் நடக்கப் போகிறது. இதனை ஏதோ சாபமாக கூறவில்லை ... இந்த சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்தி சேகரித்த ஒரு செய்தியாளனின் அனுபவத்திலிருந்து இதனை கூறுகிறேன். இன்று 89 உறுப்பினர்கள் எதிர்கட்சியான திமுக வுக்கு இருக்கிறார்களே, இது சாத்தியமா என்று கேட்கலாம். தமிழக சட்டமன்றத்தின் கடந்த 25 ஆண்டுகால வரலாற்றை பார்த்தால் இவையெல்லாம் சர்வ சாதாரணமான நிகழ்வுகள், கண்டிப்பாக சாத்தியமான நிகழ்வுகள்தான்.

கிட்டத்தட்ட சட்டமன்றத்தில் அவையின் பாதியாக இருக்கக் கூடியவர்களை வெளியேற்றி விட்டு அவை நடவடிக்கைகள் நடக்குமா? நடக்கும். கண்டிப்பாக நடக்கும். கடந்த கால வரலாறு அப்படி. ஆளுந் தரப்பு, தனக்கு எதிராக சரி பாதி அவை காலியாக இருக்கும் நிலையிலும், வெற்று மேஜை, நாற்காலிகளை பார்த்து பேசுவது என்பது தற்போதய ஆட்சியாளர்களுக்கு பழகிப் போன நிகழ்வு தான். அதில் புதியதாக ஏதுமில்லை! இதில் கூடுதலான தகவல், ஊடகங்களும், அப்போதும் வழக்கம் போல திமுகவைத்தான் விமர்சிக்கும், உரித்து தொங்க விடும், வழக்கம் போல ஆளும் கட்சியையும், அரசின் செயற்பாடுகளையும், மயிலிறகின் மென்மையான தன்மையுடன்தான் விமர்சிக்கும். இது திமுக தன்னுடைய கடந்த காலச் செயற்பாடுகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் விலைதான். ஆம்... கூச்ச நாச்சமில்லாமல் குடும்ப அரசியலை இன்றளவும் நியாயப்படுத்திக் கொண்டிருப்பதற்கு கொடுக்கும் விலை. மீடியா, சினிமா உள்ளிட்ட துறைகளில் தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஏகபோகத்தை தாங்கள் ஆட்சியிலிருந்த போது கட்டுப் படுத்த தவறியதையும் தாண்டி, அந்த ஏகபோகத்தை அதனது வேரில் நீருற்றி வளர்த்ததற்கான பெரு விலைதான் இன்றைய நிலைமை . ஆட்சியாளர்கள் பிரதான எதிர்கட்சியின் குடும்ப மோதலில் இன்று குளிர் காய்கிறார்கள் என்று புலம்புவதில் அர்த்தமில்ல ... பிரியோசஜனமும் இல்லை. அரசு இயந்திரத்தை கையில் வைத்திருப்போர் அப்படித்தான் இருப்பார்கள். இதைத்தான் திமுக வும் ஆட்சியிலிருக்கும் போது செய்தது. ஆனால் கிட்டத்தட்ட இரண்டு கட்சிகள் மட்டுமே சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த வினோதமான சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சி சிதைவது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழிக்கும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலிருந்து ஆட்சியாளர்கள் தப்பித்துச் செல்ல வழி வகுக்கும். இதுதான் உண்மை. ஆனால் இன்றைய இந்த நிலைமைக்கு ஆளும் கட்சியை விட பிரதான எதிர்கட்சியே காரணம் என்பது அதனை விட உண்மை!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.