Latest News

100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு பாதிக்கட்டணம் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


புதுச்சேரி முதல்-அமைச்சராக நாராயணசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணத்தில் சலுகை உள்பட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

பதவி ஏற்பு நிகழ்ச்சி

அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவே புதிய அமைச்சர்கள் பட்டியலுடன் டெல்லி சென்ற நாராயணசாமி கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தியிடம் ஒப்புதல் பெற்றார். பின்னர் புதிய அமைச்சர்கள் பட்டியலையும் கவர்னருக்கு அனுப்பிவைத்தார். அதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இதைத்தொடர்ந்து நாராயணசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. இதற்காக புதுவை கடற்கரை காந்தி திடலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.மேலும் கடற்கரைசாலையிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் விழா நிகழ்ச்சிகளை அனைவரும் காண்ப தற்கு வசதியாக டி.வி. பெட்டி கள் வைக்கப்பட்டு இருந்தன.

விழா பந்தலுக்கு நாராயணசாமி 11-20மணிக்கு வந்தார். அவருடன் ஒரே காரில் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோரும் வந்தனர். அவர்களை தொடர்ந்து ஷாஜகான் மற்றும் நமச்சிவாயமும் வந்தனர். நாராயணசாமி வந்த சிறிது நேரத்தில் தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்தார். அவருடன் தமிழக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் சுப்ரமணியன், செல்வம் ஆகியோரும் வந்தனர்.

வரவேற்பு

அவர்களை நாராயணசாமி வரவேற்று அழைத்து சென்று முதல் வரிசையில் அமரவைத்தார். பின்னர் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகுல்வாஸ்னிக், சின்னாரெட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் வந்தனர்.விழா நடந்த இடத்துக்கு 11-59மணிக்கு கவர்னர் கிரண்பெடி வந்தார். அவரை நாராயணசாமி அழைத்து வந்தார். கவர்னர் கிரண்பெடி மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு நேராக விழா மேடைக்கு சென்றார். அவரை தொடர்ந்து நாராயணசாமி மற்றும் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோரும் மேடைக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து பதவியேற்பு விழா தொடங்கியது.

பதவிப்பிரமாணம்

முதலில் போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசியகீதம் இசைத்தனர். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் பதவியேற்புக்கான மத்திய அரசின் உத்தரவினை தலைமை செயலாளர் மனோஜ்பரிதா வாசித்தார்.அதைத்தொடர்ந்து நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். “கடவுளின் பெயரால்” என்று கூறி நாராயணசாமி பதவிப்பிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.

அமைச்சர்கள்

அதன் பின்னர் அமைச்சர் களாக நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதில் அமைச்சர் நமச்சிவாயம் தவிர மற்ற அனைவரும் “கடவுளின் பெயரால்” என்று கூறி பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர் நமச்சிவாயம் மட்டும் “உண்மையாக“ என்று கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.தொடர்ந்து போலீஸ் பேண்டு வாத்தியகுழுவினர் தேசியகீதம் இசைத்தனர். அத்துடன் பதவியேற்பு விழா நிறைவடைந்தது. பின்னர் கவர்னர் கிரண்பெடி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு நாராயணசாமி மற்றும், அமைச்சர்களும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். அதன்பின் கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சட்டசபைக்கு வந்தனர்

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் முதல்-அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அரசுத்துறை இயக்குனர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கடற்கரை காந்தி திடலில் இருந்து சட்டசபைக்கு நடந்தே வந்தனர். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு போலீஸ் மரியாதை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் அலுவலகத்துக்கு வந்த நாராயணசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சரின் அலுவலகத்துக்கும் சென்று அவர்களை இருக்கையில் அமரவைத்தார்.
100யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணத்தை பாதியாக குறைப்பது என்றும், மாதந்தோறும் 20கிலோ இலவச அரிசி வழங்குவது என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டம்

புதுவை முதல்-அமைச்சராக நாராயணசாமியும், அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைய உறுதுணையாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது முதல்-அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம்.

20கிலோ இலவசஅரிசி

அதாவது புதுவையில் கடந்த ஆட்சியில் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் வைத்திலிங்கம் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 20 கிலோ இலவச அரிசி வழங்கினோம். எங்களது தேர்தல் பிரசாரத்தின்போது 30 கிலோ இலவச அரிசி தருவோம் என்றோம். இப்போது முதல்கட்டமாக 20கிலோ இலவச அரிசி வழங்க முடிவு எடுத்துள்ளோம். இந்த உயர்த்தப்பட்ட அரிசி வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 10 கிலோ இலவச அரிசி தேர்தல் காரணமாக 3 மாதமாக வழங்கப்படாமல் உள்ளது. அந்த அரிசி மொத்தமாக வழங்கப்படும்.
மீனவர்களின் நலனை கருதி வரிவிலக்கு அளிக்கப்படும் டீசலின் அளவை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கும் காலத்தை நீட்டித்து தங்களின் வாழ்க்கை தரத்தையும் வருமானத்தையும் உயர்த்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி படகுகளின் தன்மைக்கு ஏற்ப மானியம் பெறும் டீசலின் அளவு உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ரூ.1.76 கோடி கூடுதல் செலவாகும்.

ரூ.2.50 லட்சம்

விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் 95 சதவீத காப்பீட்டு தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர். தற்போது முழுகாப்பீட்டு தொகையையும் அரசே செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 27 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.ஏழை, எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உடல்நிலை சரியில்லாத பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு மேலும் அதிகமான பொதுமக்கள் பயனடைய தற்போது புதுவை மருத்துவ உதவி குழுமம் மூலம் வழங்கப்படும் கொடையை பெறுவதற்கான வருமான உச்சவரம்பினை ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். மேலும் இதற்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆதிதிராவிடர் நலத்துறையை இந்த அரசாங்கம் முக்கியத்துறையாக கவனத்தில் கொண்டு பட்ஜெட் நிதியில் 15.73 சதவீதத்தை அவர் களுக்காகவே செலவு செய்யும். அவ்வப்போது இதை முறையாக கண்காணித்து இந்த நிதி எக்காரணத்தை கொண்டும் வேறு திட்டத்திற்கு மாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்.

மின் கட்டண சலுகை

மாதந்தோறும் 100 யூனிட்டுகளுக்கு கீழ் மின்சாரம் உபயோகிக்கும் வீட்டு உபயோக மின் நுகர்வோர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை (பாதிக்கட்டணம்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.13 கோடி அரசுக்கு செலவாகும். இந்த விஷயத்தில் டெல்லி அரசும் சில சலுகைகளை வழங்கி உள்ளது. அதையும் பின்பற்ற திட்டமிட்டுள்ளோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண சலுகை மூலம் 1.23 லட்சம் பேர் பயனடைவார்கள். இதனை 2 லட்சம் பேர் பயனடையும் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.உழவர்கரை நகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இன்னும் கொண்டுவரப்படாமல் உள்ளது. புதுவை மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2 நகரத்துக்கு வரவேண்டும். இந்த திட்டம் புதுச்சேரி நகராட்சிக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், தனவேலு மற்றும் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.